நீண்ட நேரப் பணியின்போது தூங்காமல் இருக்க போதைப்பொருள் உட்கொண்ட தனியார் வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவருக்கு வியாழக்கிழமை (மார்ச் 12) ஆறு ஆண்டு சிறைத் தண்டனையும் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
மலேசியாவில் உள்ள விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்ட போதைப் பொருள்களையும் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 48 வயது லிம் ஹியோங் ஷெங் விற்பனை செய்தார்.
போதைப்பொருள் உட்கொண்டது, போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை லிம் ஒப்புக்கொண்டார்.
போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொழில்நுட்ப வல்லுநர் பணியிலிருந்து ஆட்குறைப்புச் செய்யப்பட்ட லிம் மெத்தஃபெடமின்னை விற்கத் தொடங்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
மலேசிய விற்பனையாளரிடமிருந்து போதைப்பொருளை வாங்கியபின் லிம் அதை 2.5 கிராம், 5 கிராம் பொட்டலங்களில் போடுவார்.
ஒவ்வொரு 5 கிராம் போதைப்பொருளையும் $300லிருந்து $380 வரை லிம் விற்பனை செய்தார். அடிக்கடி வாங்குவோருக்கு லிம் அவற்றை $150க்கு விற்றார்.
குடும்பத்துக்கு அதுபற்றி தெரிந்துவிடக்கூடாது என்று போதைப் பொருளை லிம் தமது காரில் மறைத்துவைத்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி ஜூரோங் வெஸ்டில் மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் லிம்மைக் கைதுசெய்தனர்.
லிம்மின் காரில் அதிகாரிகள் போதைப் பொருளைக் கண்டெடுத்தனர்.

