பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அடிக்கடி சிறைக்குச் சென்று வரும் ஒருவர், சக ஊழியரைத் தாக்கி மூளையில் காயம் ஏற்படுத்தியதற்காக மீண்டும் சிறையில் தள்ளப்பட்டார்.
முகம்மது அட்லி அம்ரான்மீது வன்முறை தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுவது இது நான்காவது முறையாகும்.
சம்பவத்தில் காயமடைந்த 47 வயது நபர் குணமடைந்தாலும் அவரால் இன்னமும் நுகரும் திறனை மீண்டும் பெற முடியவில்லை.
ஆகஸ்ட் 31ஆம் தேதி, அட்லிக்கு ஒன்பது மாதங்கள், 22 வாரச் சிறைத்தண்டனையும் $1,200 அபராதமும் விதிக்கப்பட்டது.
அவர், தம்மீது சுமத்தப்பட்ட தாக்கிய குற்றச்சாட்டையும் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.
கோல்மேன் ஸ்திரீட்டில் உள்ள ஓர் இரவு விடுதியில் அட்லி பாதுகாப்பாளராகப் பணியாற்றி வந்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் அங்கு மேலாளராக இருந்ததாகவும் தெரியவந்தது.
2025 மே 3ஆம் தேதி அதிகாலையில் விடுதிக்குள் சில நபர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது.
அந்தச் சம்பவத்தை அட்லி கையாண்ட விதம் குறித்து அவருடைய மேலாளர் கண்டித்தார்.
மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அட்லி அந்த நபரை முகத்தில் குத்தியதால், அவர் கீழே விழுந்து கண்ணாடியின் மீது மோதினார்.
அங்கிருந்த சக ஊழியர்கள் அவசர சிகிச்சை வாகனத்தை வரவழைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின்னர் அட்லி கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட நபருக்குத் தலையில் பலத்த மூளைக்காயம் ஏற்பட்டது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதனால் அவர் தமது நுகரும் திறனை இழந்தார்.


