சிறுமி துன்புறுத்தப்படுவதைத் தடுக்காத பாலர் பள்ளி ஆசிரியருக்குச் சிறைத் தண்டனை

2 mins read
f40daa23-0d93-4707-8fe7-f98672553612
வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை (ஏப்ரல் 23) அறிவிக்கப்பட்டது. - படம்: அரசு நீதிமன்றம்

தன் சக ஊழியர் இரண்டு வயதுச் சிறுமியை மீண்டும் மீண்டும் ஒரு சிறு பிளாஸ்டிக் பொருளால் அடித்ததையும் மேசைக்கடியில் தள்ளியதையும் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த 29 வயது பாலர் பள்ளி ஆசிரியருக்கு இரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (ஏப்ரல் 23) அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி, சிறுமி துன்புறுத்தப்பட்ட அச்சம்பவம் பாலர் பள்ளியின் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

அப்போது அந்த ஆசிரியரும் அவரது சக ஊழியரும் ஒரு பாலர் பள்ளி வகுப்பறையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்தனர். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் சம்பவத்தன்று காலை வகுப்பறைக்குள் நுழைந்தபோது, சிறுமி நாற்காலி, மேசைக்கு அடியில் சுவரையொட்டி நெருக்கித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, அவருடைய சக ஊழியர் சிறுமியை அவ்வாறு துன்புறுத்தினார்.

சிறுமி மேசையின்கீழ் நகர்வதைக் கண்டதும் தன் சக ஊழியரிடம் சுட்டினார் அந்த ஆசிரியர். உடனே அந்த சக ஊழியர் மேசையை மீண்டும் மீண்டும் சுவரையொட்டி நெருக்கித் தள்ளினார். பின்பு ஒரு பிளாஸ்டிக் கோப்பால் (divider) மீண்டும் மீண்டும் சிறுமியின் தலையில் அடித்தார்.

குற்றவாளி அதைத் தடுக்கவில்லை. கண்டுகொள்ளாமல் அப்படியே சென்றுவிட்டார். அச்சிறுமியின் தாயார், மகளின் முகத்தில் ஏற்பட்ட காயங்களைப் பார்த்தபின் பள்ளியைத் தொடர்புகொண்டதும் குற்றவாளி தன் சக ஊழியர்மீது பள்ளியில் புகாரளித்தார்.

சிறுமியை வதைத்த ஊழியரான 30 வயதுப் பெண்மணி மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அந்த வழக்கு மே 5ஆம் தேதி விசாரிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்