குழந்தை ஆபாசப் படங்களை வைத்திருந்த ஆசிரியருக்குச் சிறை

2 mins read
906bd018-9f5e-477b-9de6-4dae56c480e1
குழந்தைத் துன்புறுத்தல் படங்கள் வைத்திருந்ததாகவும், நீதி நடைமுறையைத் தடுத்ததாகவும் தம்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளை ஆகஸ்ட் 15ஆம் தேதி குவேக் ஒப்புக்கொண்டார்.   - படம்: பிக்சாபே

குழந்தை பாலியல் வன்முறைப் படங்களைப் பதிவிறக்கம் செய்து, தமது கூட்டுரிமை வீட்டில் ஆபாசப் படங்களைத் தயாரித்த ஆசிரியர் ஒருவருக்கு 13 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின்போது, யுஜீன் குவேக், 40, தமது ‘ஐஃபோன்’, ‘மேக்புக்’ மடிக்கணினி ஆகியவற்றுக்கான கடவுச்சொற்களை காவல்துறையிடம் கொடுக்க மறுத்தார். அவற்றில் அதிகமான குழந்தை ஆபாசப் படங்கள் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குழந்தைத் துன்புறுத்தல் படங்கள் வைத்திருந்ததாகவும், நீதி நடைமுறையைத் தடுத்ததாகவும் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆகஸ்ட் 15ஆம் தேதி குவேக் ஒப்புக்கொண்டார்.

கார்ப்பரேஷன் ரோட்டில் உள்ள தமது ‘லேக்ஹொல்ம்ஸ்’ கூட்டுரிமை வீட்டில் ஆபாசப் படங்களைத் தயாரித்ததாகவும் வைத்திருந்ததாகவும் அவர்மீது சுமத்தப்பட்ட மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

குவேக் சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்றும், அவர் எந்தவொரு பள்ளியிலும் கற்பிக்கவில்லை என்றும் கல்வி அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் இவ்வாண்டு ஜூன் மாதம் கூறியது.

2020ஆம் ஆண்டில், அடிக்கடி ஆபாசப் படங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்ட சில டெலிகிராம் உரையாடல் குழுக்களில் குவேக் சேர்ந்துகொண்டதாக அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் ஷெல்டன் லிம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

அவற்றில் உள்ள உறுப்பினர்கள் சிலர் குழந்தை பாலியல் வன்முறைப் படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்துகொண்டனர். குவேக் அவற்றைப் பார்த்ததுமே, அவை தானாகவே அவரின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு 15ஆம் தேதி காவல்துறைக்குக் கிடைத்த தகவலின்படி குவேக்கின் வீட்டில் திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்