கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட $150,000க்கும் அதிகமான தொகையைக் கையாடிய குற்றத்துக்காக அக்கோயிலில் அலுவலராகப் பணிபுரிந்த பெண்ணுக்கு நவம்பர் 7ஆம் தேதியன்று 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
59 வயது கோ பீ ஹியாங், தெம்பனிஸ் ஸ்திரீட் 21ல் அமைந்துள்ள தெம்பனிஸ் சீனக் கோயிலில் 1995ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கோயிலுக்குச் சொந்தமான நிதியைக் கையாளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கோயிலுக்குச் சொந்தமான பணத்தை கோ கையாடினார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற கோயிலின் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது பணப் பரிவர்த்தனைகளைக் காட்டும் ஆவணங்களை அவரால் சமர்ப்பிக்க முடியாமல் போனபோது அவரது குற்றச் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணம் பாதுகாப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அப்பெட்டியின் சாவி கோவிடம் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மரணம் அடைந்த தமது சகோதரரின் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த பணத்தை கோ எடுத்ததாக அவரது வழக்கறிஞரான திரு தாம் கோக் லியோங் கூறினார்.
கோவின் முதுமை, சம்பவத்துக்குப் பிறகு அவர் வேலையில்லாமல் இருப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தை திரு தாம் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
நம்பிக்கைத் துரோகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.