தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோயில் நன்கொடைகளைக் கையாடிய பணியாளருக்குச் சிறை

2 mins read
5b2c2574-9709-4dfa-b399-d2fea230f4ba
குற்றம் நடந்த நேரத்தில், தாம் லாய் யிங், 44, தோ பாயோ சியூ டெக் சியன் டோங் கோயிலின் பணியாளராக இருந்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோயில் நிதியில் $38,000 திருடிய அதன் பணியாளர் ஒருவருக்கு பத்து மாதங்கள் இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நடந்த நேரத்தில், தாம் லாய் யிங், 44, தோ பாயோ சியூ டெக் சியன் டோங் கோயிலில் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அன்றாடம் உணவகங்களில் சாப்பிடுவதற்கும், மளிகைப் பொருள்களை வாங்குவதற்கும் அவர் அந்த நிதியைப் பயன்படுத்தினார்.

தாமின் செயல் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று அரசுத் தரப்புத் துணை வழக்கறிஞர் லிம் லி டிங் கூறினார்.

அறநிதி நோக்கங்களுக்காக பொதுமக்கள் அந்தப் பணத்தைக் கொடுத்ததே அதற்குக் காரணம் என்றார் அவர்.

கடந்த ஜூலையில், தம்மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டை தாம் ஒப்புக்கொண்டார்.

தாம், அக்கோயிலில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணியில் சேர்ந்ததாகவும் அவருக்கு மாதச் சம்பளமாக $1,600 வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

நன்கொடை, உறுப்பினர் கட்டணங்களைப் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கான ரசீதை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கிய பிறகு, அதற்கான ரசீது புத்தகத்தையும் பணத்தையும் கோயிலின் நிதி அதிகாரியிடம் அவர் ஒப்படைக்க வேண்டும்.

கோயிலில் பணிக்குச் சேர்ந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, பணத்தைக் கையாடல் செய்ய அவர் தொடங்கியதாகக் கூறப்பட்டது.

அவர் மொத்தம் $38,799 திருடினார். அவர் பேராசையில் பணத்தைத் திருடியதாக அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் லிம் கூறினார்.

குற்றத்தை மறைக்க, தாம் சில ரசீது புத்தகங்களை நிதி அதிகாரியிடம் ஒப்படைக்கவில்லை. 2022ஆம் ஆண்டு மே மாதத்தில், புத்தகங்கள் இல்லாததை உணர்ந்த நிதி அதிகாரி, கோயிலின் தலைமைச் செயலாளரிடம் அது பற்றித் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மறுமாதம் உள்கணக்காய்வு நடத்தப்பட்டது.

தலைமைச் செயலாளர் கேட்டபோது, தாம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் பின்னர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்