சைனாடவுன் நகைக்கடையில் ஏறத்தாழ $200,000 மதிப்புள்ள வைரத்தைத் திருடி, அதற்குப் பதிலாகப் போலி வைரத்தை வைத்து ஏமாற்றிய வழக்கில் இந்தியச் சுற்றுப்பயணியான 41 வயது மங்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய்க்கு இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள், இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 19ஆம் தேதி, கிரேத்தா ஆயர் சாலையில் உள்ள டயேனோச் நகைக்கடைக்கு மங்ரோலியாவும் 30 வயது செராசியா மிலன் ரம்னிக்பாயும் சென்றனர். அங்கு விற்பனை மேலாளரின் கவனத்தைத் திசைதிருப்பி, செராசியா தமது வாய்க்குள் மறைத்து வைத்திருந்த போலி வைரத்தை உமிழ்ந்துவிட்டு, 4.95 கேரட் எடையுள்ள உண்மையான வைரத்தைத் திருடி வாய்க்குள் மறைத்துக்கொண்டார்.
கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மூலம் இத்திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அன்றே சாங்கி விமான நிலையம் வழியாக இந்தியாவுக்குத் தப்ப முயன்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, வைரத்தை மீட்டனர். மங்ரோலியா குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து. அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. செராசியாவின் வழக்கு நிலுவையில் உள்ளது.

