தங்குவதற்குத் தவிர வேறு எந்த விதத்திலும் பயன்படுத்த மாட்டோம் எனப் பொய் கூறி, நல்ல தரமான பங்களா வீடு ஒன்றை ஐவர் வாடகைக்கு எடுத்தனர்.
ஆனால், அவர்களில் சிங்கப்பூரரான உ பெங்ஃபெய் என்ற 35 வயது ஆடவர், விக்டோரியா பார்க் வீட்டின் குத்தகை ஒப்பந்தத்துக்காக மட்டுமே தனது பெயரைக் கொடுத்துள்ளார்.
அந்த ஐவரில் மற்றொருவரான கம்போடியக் குடிமகனான 33 வயது உ குவோஜிங் என்பவர்தான் இந்த மோசடியின் பின்னணியில் இருந்து அந்த வீட்டைத் தன் நண்பர்கள், வர்த்தகப் பங்காளிகளுக்கான மனமகிழ் மன்றமாக பயன்படுத்தி உள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நிறுவனங்களில் இயக்குநராக உள்ள உ குவோஜிங்தான் அந்த பங்களா வீட்டை மனமகிழ் மன்றமாகப் பயன்படுத்தி அதற்கான வாடகையாக மாதம் $58,000 தந்ததாக அரசு துணை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் தற்பொழுது சிங்கப்பூரைவிட்டுச் சென்று தலைமறைவாக உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் திங்கட்கிழமை (மே 26) உ பெங்ஃபெய், அவருடைய நண்பர்களில் மற்றொருவர், சீன நாட்டவரான சு சென்டான் ஆகிய மூவருக்கும் ஆளுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அம்மூவரும் தங்கள் மீதான ஏமாற்றுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.

