சட்டவிரோதமாக மற்றவர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பெற்ற இருவருக்குச் சிறை

சட்டவிரோதமாக மற்றவர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பெற்ற இருவருக்குச் சிறை

1 mins read
6188807c-a030-42ec-a8ec-261690f9c7c5
படம்: - பிக்சாபே

சட்டவிரோத இணையச் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக மலேசியரான 39 வயது காங் சியென் ஹோய், மற்றவர்களின் தனிப்பட்ட தரவுகளைக் கள்ளத்தனமாகச் சீன நாட்டைச் சேர்ந்த சன் ஜியோவிடமிருந்துப் பெற்றுள்ளார்.

16,169 பேரின் தனிப்பட்டத் தரவுகளை சன் பகிர்ந்ததாகக் கூறப்பட்டது.

தீங்கிழைக்கும் இணையச் செயல்பாடுகளில் ஈடுபட்ட உலகளாவிய கும்பலுடன் 42 வயதான சன்னுக்குத் தொடர்பிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

காங்கின் மலேசிய கூட்டாளியான 42 வயது சியோவ் கிம் ஷென் என்பவருக்கும் அந்தத் தரவுகள் பகிரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக மற்றவர்களின் தனிப்பட்டத் தகவல்களைப் பெற்ற குற்றத்திற்காக சியோவ், காங் ஆகிய இருவருக்கும் தலா 14 வாரச் சிறைத் தண்டனை வியாழக்கிழமையன்று (அக்டோபர் 24) விதிக்கப்பட்டது.

தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இருவரும் நீதிமன்றத்தில் ஒப்புகொண்டனர்.

சூதாட்ட இணையதளங்களில் ஊடுருவி அதில் சேமிக்கப்பட்டிருக்கும் பயனர்கள் பட்டியலையும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் திருடியதாக விசாரணை அதிகாரிகளிடம் சன் தெரிவித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, செப்டம்பர் மாதம் தீங்கிழைக்கும் இணையச் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட அறுவரில் சன்னும் ஒருவர். அவர்களின் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட சில இணையத்தளங்களில் ஊடுருவி, அவற்றில் இருக்கும் விவரங்களைத் தீங்கிழைக்கும் நடவடிக்கையில் பயன்படுத்தத் திட்டமிட்ட குழுவில் சன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்