நால்வரைத் தாக்கிய மாதிற்குச் சிறை

நால்வரைத் தாக்கிய மாதிற்குச் சிறை

2 mins read
41eb51be-434f-453d-a55d-765ce68e1f6b
நூர் ஷீரா அப்த் சபர், 28, 2024ஆம் ஆண்டில் இருவரைத் தாக்கினார். பின்னர் அதே ஆண்டு நவம்பரில் அவர் கைதுசெய்யப்பட்டார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெண் காவல்துறை அதிகாரி, 74 வயது மூதாட்டி ஆகியோர் உட்பட நான்கு பெண்களைத் தாக்கிய மாதிற்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) 36 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஆபத்தானவர், நிலையற்றவர் என்று நீதிமன்றத்தில் வருணிக்கப்பட்டார்.

நூர் ஷீரா அப்த் சபர், 28, 2024ஆம் ஆண்டில் இருவரைத் தாக்கினார்; பின்னர் அதே ஆண்டு நவம்பரில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

சென்ற ஆண்டு பிணையில் வெளிவந்தபோது, அவர் பெண் காவல்துறை அதிகாரியையும், மூதாட்டியையும் தாக்கினார்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி, உட்லண்டஸ் அவென்யூ 6ல் உள்ள காப்பிக்கடை ஒன்றில், நூர், 57 வயதான முதல் மாதைத் தாக்கியதாக அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் தேடியஸ் டான் கூறினார்.

அந்தத் தாக்குதலுக்கான காரணம் வெளியிடப்படவில்லை. காப்பிக்கடையைவிட்டு வெளியேறியதற்கு முன்னர், நூர் அந்த மாதை நெரித்துக் குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 2024ல், நவம்பர் 4ஆம் தேதியன்று, சுவா சூ காங் ஸ்திரீட் 51ல், நூர், 68 வயது காசாளரை நோக்கி அவரது கைப்பேசியை வீசினார். அந்தக் காசாளரின் வலது புருவத்தில் காயம் ஏற்பட்டது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல்துறையிடம் புகார் செய்தபின், நூர் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அதே நாள் பின்னேரத்தில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மூன்றாவது தாக்குதல் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி நேர்ந்தது. நூர், அட்மிரல்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்தபோது, 74 வயது மூதாட்டியைத் தாக்கினார். அவர் மூதாட்டியின் முகத்தை அறைந்து அவரது கழுத்தை நெரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சம்பவத்தை விசாரிக்க, சென்ற ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில், 47 வயது பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல், நூரின் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக்குச் சென்றிருந்தார்.

அப்போது நூர், காவல்துறை அதிகாரியின் கைப்பேசியை தரையில் வீசியதாகவும், கைப்பேசியை எடுக்கச் சென்ற அதிகாரியை சுவரில் தள்ளி அவரது தலையைப் பலமுறை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி மீண்டும் கைதுசெய்யப்பட்ட நூர், அப்போதிலிருந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்