இறுதிச் சடங்குகளை நடத்தும் நிறுவனத்தின் இயக்குநரான அல்வெர்னா செர் சுயு பின், தனது முன்னாள் காதலன் உயிரை மாய்த்துக்கொள்ள உதவியுள்ளார்.
அதற்காக அப்பெண்ணுக்கு 6 ஆண்டுகள் 2 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
40 வயது அல்வெர்னா தம் காதலன் வீ ஜுன் ஜியாங், 32, உயிரை மாய்த்துக்கொள்ள உதவியதோடு வழக்கு விசாரணையின்போது காவல்துறையிடம் பொய்யான தகவல்களையும் கொடுத்துள்ளார்.
ஜியாங் உயிரை மாய்த்துக்கொள்ளவதற்கு முன் ‘சோதனை ஓட்டம்’ ஒன்றையும் நடத்தியுள்ளார், அதற்கும் அல்வெர்னாவும் உதவியுள்ளார். ஜியாங் இறந்த பிறகு அவருக்கு இறுதிச்சடங்கு நடத்தவும் அவர் ஒப்புக்கொண்டார்.
ஜியாங், 2020ஆம் ஆண்டு மே 16 அன்று பிடோக் ரிசர்வோர் ரோட்டில் உள்ள புளோக் 145இன் அடுக்குமாடி வாகனம் நிறுத்தும் இடத்தில் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தமது உயிரை மாய்த்துக்கொண்டார்.
ஜியாங் பயன்படுத்திய நைட்ரஜன் வாயு நிரம்பிய கலனை சீ ஓன் ஹுய் என்னும் ஆடவரின் துணையுடன் அகற்றினார் அல்வெர்னா.
மாண்ட ஜியாங்கும் அல்வெர்னாவும் 2019ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அல்வெர்னாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
தீர்ப்பை எதிர்த்து அல்வெர்னா மேல்முறையீடு செய்துள்ளார்.

