செம்பவாங்கில் உள்ள வாடகை வீட்டில் தீ மூட்டி, அவருடைய முன்னாள் காதலருக்கு உடலில் 15 விழுக்காட்டுத் தீக்காயங்கள் ஏற்படுத்திய குற்றத்திற்காக டல்ஜீத் கோர் தரம் சாண்ட்டுக்கு ஓர் ஆண்டு, ஏழு மாதச் சிறைத் தண்டனை திங்கட்கிழமையன்று (மே 20) விதிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைக்குப் பிறகு மார்ச் மாதம், 35 வயதான டல்ஜீத் கோருக்குத் தீ மூட்டுவதற்குக் கண்மூடித்தனமாகச் செயல்பட்ட குற்றத்திற்காகத் தண்டனை விதிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றம் நடந்தபோது 32 வயதாக இருந்த டல்ஜீத் கோரின் முன்னாள் காதலர் திரு பிரேம்ராஜ் ரகுவிற்கு முதுகிலும் இடது பிட்டத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
மலேசியரான அவர் இச்சம்பவத்தைத் தொடர்ந்து மனச்சோர்வுக்கு ஆளானதாகவும் அவரது கைகளில் நிரந்தரத் தழும்பு இருப்பதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அவர்கள் இருவரும் வாடகை குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்ததாகவும் பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்ததாகவும் கூறப்பட்டது.

