தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகஸ்ட் 1 செயல்பாடுகளைத் தொடங்கிய ஜாலான் காயு, பொங்கோல் நகர மன்றங்கள்

2 mins read
6832ec86-5546-4c77-b402-0249eb32c65e
ஜாலான் காயு, பொங்கோல் நகர மன்றங்கள் புதிய இணையப்பக்கங்களை அறிமுகம் செய்துள்ளன. - படம்: ஜாலான் காயு நகர மன்றம் / ஃபேஸ்புக், பொங்கோல் நகர மன்றம் / ஃபேஸ்புக்

புதிதாக உருவாக்கப்பட்ட ஜாலான் காயு, பொங்கோல் நகர மன்றங்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து செயல்பாடுகளை அதிகாரபூர்வமாகத் தொடங்குகின்றன.

ஜாலான் காயு நகர மன்றம் தனித்தொகுதியில் உள்ள 29,500க்கும் அதிகமான வாக்காளர்களுக்கும், பொங்கோல் நகர மன்றம் 123,500க்கும் அதிகமான வாக்காளர்களுக்கும் சேவை வழங்குகின்றன.

ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஜாலான் காயு நகர மன்றம் புதிய சின்னத்தையும் இணையப்பக்கத்தையும் அறிமுகம் செய்ததாகத் தெரிவித்தது.

அத்தியாவசியச் சேவைகள், அறிவிப்புகள், தொடர்புகள், இடவசதிக்கு முன்பதிவு செய்வதற்கான தளங்கள் ஆகியவற்றை இணையப்பக்கம் கொண்டுள்ளது.

இவ்வாண்டு பொதுத் தேர்தலுக்குப் பின் ஜாலான் காயு, பொங்கோல் ஆகிய இரண்டு புதிய நகர மன்றங்கள் அமைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 19 நகர மன்றங்களை அமைக்க தேசிய வளர்ச்சி அமைச்சு மே மாதத்தில் ஆணை பிறப்பித்தது.

மே 3ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சியின் ஆண்ட்ரே லோவை எதிர்த்துப் போட்டியிட்டு ஜாலான் காயுவில் வென்ற திரு இங் சீ மெங், நகர மன்றத்தின் புதிய இணையப்பக்கம் பேட்டையின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதை எளிதாக்குகிறது.

ஜாலான் காயு நகர மன்றத் தலைவருமான அவர், குடியிருப்பாளர்கள் தடையற்ற சேவைகளைப் பெற முடியும் என்றார்.

இதற்குமுன் அங் மோ கியோ நகர மன்றத்தின் ஒரு பகுதியாக இருந்த ஜாலான் காயு வட்டாரம் தேர்தல் எல்லை மறுஆய்வுக்குப் பின் ஜாலான் காயு தனித்தொகுதியாகப் பிரிக்கப்பட்டது.

பொங்கோல் நகர மன்றமும் புதிய இணையப்பக்கத்தையும் மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகம் செய்ததைக் குறிப்பிட்டது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவரப்படி, பொங்கோல் பேட்டையின் நிர்வாகத்தை பாசிர் ரிஸ் - சாங்கி நகர மன்றத்திடமிருந்து பொங்கோல் நகர மன்றம் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொண்டது.

இதற்குமுன் 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின் பொத்தோங் பாசிரில் ஒரே ஒரு தனித்தொகுதியைக் கொண்டு நகர மன்றம் உருவாக்கப்பட்டது.

மக்கள் செயல் கட்சியின் திரு சீத்தோ யி பின் 2015ஆம் ஆண்டு வரை நகர மன்றத்தை நடத்தினார்.

குறிப்புச் சொற்கள்