ஜாலான் காயு தனித் தொகுதியில் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி (ஆர்டியு) போட்டியிடவில்லை. பாட்டாளிக் கட்சிக்கு வழிவிடும் வகையில் அக்கட்சி போட்டியிலிருந்து விலகுகிறது.
பாட்டாளிக் கட்சி அங்கு வேட்பாளரை நிறுத்த விரும்புவதால் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி போட்டியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “பாட்டாளிக் கட்சியுடனும் தனது தேர்தல் குழுவுடனும் கவனமாக கலந்து ஆலோசித்த பிறகு அத்தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்ற சிரமமான முடிவை எடுத்திருக்கிறோம்,” என்று ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் தலைவர் ரவி ஃபிலமன் தெரிவித்தார்.
ஜாலான் காயு குடியிருப்பாளர்களை தெளிவான, உறுதியான, நேர்மையான ஒருவர் பிரதிநிதிப்பதை உறுதி செய்ய தமது கட்சி விரும்புவதாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளுக்கான வாக்குகள் பிரிந்து விடக்கூடாது அல்லது எதிர்க்கட்சியின் குரல் பலவீனமடையக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜாலான் காயு குடியிருப்பாளர்கள் மற்றும் ஜாலான் காயு குடிமக்களின் நலன்களை கருத்தில் கொண்ட வழிகாட்டி கொள்கையின்கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ரவி ஃபிலமன் மேலும் தெரிவித்தார்.
மார்ச் 21 அன்று ஜாலான் காயுவில் தனது முதல் நடைப்பயணத்தை ‘ஆர்டியு’ மேற்கொண்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தனித் தொகுதியில் தமது குழுவை வழிநடத்தவிருந்த கல்வியாளரும் முன்னாள் சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரியுமான திருவாட்டி கலா மாணிக்கத்தை அக்கட்சி அறிமுகப்படுத்தியது.
இதற்கு முன், ஜாலன் காயு தனித்தொகுதி பலமுனைப் போட்டியை நோக்கிச் சென்றது. ‘ஆர்டியு’, சீர்திருத்த மக்கள் கூட்டணி, மக்கள் சக்தி கட்சி ஆகியவை அத்தொகுதியில் போட்டியிட முதலில் ஆர்வத்தை வெளிப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.