தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜாலான் காயு தனித்தொகுதி: நூலிழையில் இங் சீ மெங் வெற்றி

2 mins read
4d81ccac-84b8-41c3-99be-7a8f08caa7aa
தேர்தலில் நிற்பது திரு இங்கிற்கு மூன்றாவது முறையாக இருந்தாலும் தனித்தொகுதி ஒன்றில் போட்டியிட்டது இவருக்கு முதல் முறையாகும். - கோப்புப் படம்.

ஜாலான் காயு தனித்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் மக்கள் செயல் கட்சி 51.47 விழுக்காடு வாக்குகளுடன் முன்னிலை பெற்றது. எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சிக்கு 48.53 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

புதிய ஜாலான் காயு தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பில் திரு இங் சீ மெங்கும் பாட்டாளிக் கட்சியின் புதுமுகமான திரு ஆண்ட்ரே லோவும் போட்டியிட்டனர். அத்தொகுதியில் 29,565 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலில் நிற்பது திரு இங்கிற்கு மூன்றாவது முறையாக இருந்தாலும் தனித்தொகுதி ஒன்றில் அவர் போட்டியிட்டது இதுவே முதன்முறை.

இயோ சூ காங் விளையாட்டரங்கில் ஆதரவாளர்களின் உற்சாகக் கைத்தட்டலை ஏற்ற திரு இங், “நம்பிக்கையுடன் நீங்கள் எனக்கு வாக்களித்ததற்காக நான் மனமார நன்றி நவில்கிறேன்,” எனக் கூறினார்.

“இது மிகவும் கடுமையான போட்டி. நீங்கள் அனைவரும் இல்லை என்றால் இந்த முடிவு சாத்தியமாக இருந்திருக்காது,” என்று நிம்மதிப் பெருமூச்சுடன் திரு இங், குழுமி நின்ற மக்கள் செயல் கட்சியினரிடம் தெரிவித்தார்.

பணிவுடனும் முழுமனத்துடன் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்ற எண்ணுவதாகக் கூறிய திரு இங், வலுவான, பரிவான, அனைவரையும் மேலும் ஒருங்கிணைக்கக்கூடிய ஜாலான் காயுவை அமைக்கப் பாடுபடப்போவதாக உறுதியளித்தார்.

முன்னாள் அமைச்சரான திரு இங், 2020ல் புதிதாக உருவாக்கப்பட்ட செங்காங் குழுத்தொகுதியில் நான்கு வேட்பாளர்களுடன் அணியை வழி நடத்தி பாட்டாளிக் கட்சிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றார்.

அந்தத் தோல்விக்குப் பிறகு, தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளராகத் திரு இங் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் மக்கள் செயல் கட்சியின் மத்தியக் குழுவில் சேர்க்கப்பட்டார்.

29,628 வாக்காளர்கள் கொண்ட இந்தத் தனித்தொகுதி, அங் மோ கியோ தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டது. முன்னைய செங்காங் வெஸ்ட் தனித்தொகுதியின் சில பகுதிகள், ஜாலான் காயு குழுத்தொகுதிக்குள் சேர்க்கப்பட்டன.

ஜெர்மானிய காப்புறுதி நிறுவனம் அலயன்சிடம் என்டியுசியின் இன்கம் அலயன்சின் விற்பனையின் ரத்து, தேர்தல் பிரசாரத்தின்போது பரவலாகப் பேசப்பட்ட விவகாரமாக இருந்தது.

இந்த ஒப்பந்தம் குறித்து கேள்விக் கேட்கப்பட்ட திரு இங், ஒப்பந்தம் நல்ல நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி ஏப்ரல் 27ஆம் தேதியன்று மன்னிப்பு கேட்டார்.

சில நாள்கள் கழித்து டெலிகிராம் தளத்தில் திரு லோ வெளியிட்ட தகாத வார்த்தைகள் கொண்ட குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டன. அது குறித்து திரு லோ மன்னிப்பு கேட்டு அவை முற்றிலும் ஏற்புடையது அன்று எனக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்