சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம்மின் உடல்நலம் பாதிக்கப்பட்டதுபோல் தெரிந்தது.
அதைத் தொடர்ந்து அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்ஃபுளுவென்ஸா ஏ வகை சளிக்காய்ச்சலுக்கு ஆளானதைத் தொடர்ந்து திரு லிம் நிமோனியா காய்ச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.
திரு லிம், முதலில் சென்ற வாரத்தின் எஞ்சிய பகுதி மட்டுமே ஓய்வெடுக்கத் திட்டமிட்டிருந்தார் என்று பாட்டாளிக் கட்சி திங்கட்கிழமை (அக்டோபர் 12) காலை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. எனினும், தமது ரத்தத்தில் உயிர்வாயுவின் அளவு குறைந்ததையடுத்து மருத்துவமனையில் சேர்ந்துகொள்ள வேண்டியிருந்ததாக திரு லிம் கூறியுள்ளார்.
தாம் மருத்துவமனையில் இருக்கவுள்ள காலத்தை அவர் தமது பதிவில் குறிப்பிடவில்லை.
தாம் பொறுப்பு வகிக்கும் ஆங்கர்வேல் தொகுதிவாசிகளிடம் பேசிய திரு லிம், அக்டோபர் 6ஆம் தேதி நாடாளுமன்ற அமர்வின்போது மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்ததைக் காட்டும் காணொளியைச் சுட்டினார்.
“அந்த மூக்கை உறிஞ்சும் நிகழ்வு மோசமான இன்ஃபுளுவென்ஸா ஏ சளிக்காய்ச்சலாக உருவெடுத்தது. அதன் பிறகு முழுவீச்சில் நிமோனியா காய்ச்சல் வந்தது,” என்று அவர் தமது பதிவில் தெரிவித்தார். தம்மால் இப்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்ப் பணிகளை மேற்கொள்ள இயலாது என்றும் திரு லிம் குறிப்பிட்டார்.
