சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறுக்கிழமை வரை (ஜனவரி 17 முதல் 19 வரை) பெய்யும் என எதிர்பார்க்கப்படும் தொடர் மழை, தீவிரம் குறைந்ததாக இருக்கும் என்றும் அது குறுகிய நேரம் பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) பதிலளித்த சிங்கப்பூர் வானிலை மையம் இதைத் தெரிவித்தது.
ஆனால், காற்று வீசும் திசை, வேகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பருவமழை அதிகரிப்பு சார்ந்திருப்பதால், அதன் அளவையும் தீவிரத்தையும் கணிப்பது சிரமம் என்று அது கூறியது.
சிங்கப்பூரில் ஜனவரியில் இரண்டாவது முறையாக பருவமழை அதிகரிக்கும் என்று வானிலை மையம் வியாழக்கிழமை (ஜனவரி 16) முன்னுரைத்திருந்தது. இதனால் காற்று வீசுவதுடன் குளிர்ந்த வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
கடல்நீர் மட்டம் ஏற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தற்போதைய பருவமழையின்போது கடலோரப் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படலாம்.
கடல்நீர் மட்டம் ஏற்றமாக இருக்கும் தருணங்களில், மழை இடைவிடாது பெய்யாவிடினும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம்.
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சராசரியாக இரண்டு முதல் நான்கு முறை வரை பருவமழை அதிகரிக்கிறது.