சிங்கப்பூரில் இவ்வாண்டின் இரண்டாவது பருவமழை எழுச்சியால், ஜனவரி 17 முதல் ஜனவரி 19 வரை தீவுமுழுதும் இடைவிடாமல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பருவமழை எழுச்சி ஜனவரி 13ஆம் தேதி நிறைவடைந்த சில நாள்களிலேயே, இரண்டாவது பருவமழை எழுச்சி வருகிறது. இதனால், சிங்கப்பூரிலும் சுற்றியுள்ள வட்டாரங்களிலும் மிதமான அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அவ்வப்போது காற்றோட்டமான, குளிரான நிலைகள் ஏற்படக்கூடும் என்றும் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வானிலை மையம் கூறியது.
இந்த வாரயிறுதிப் பருவமழையின்போது, கடலோரப் பகுதிகளில் அதிகமான திடீர் வெள்ளங்கள் ஏற்படக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்த வாரயிறுதியில் கடல்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடல்மட்ட அளவு உயர்வாக இருக்கும் காலத்தில், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் தொடர் மழை பெய்யாவிட்டாலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம்.
ஜனவரி 17ஆம் தேதி பிற்பகலில் கடல்மட்டம் 3.2 மீட்டர் உயரத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தகவல் வெளியிட்டது. சனிக்கிழமை (ஜனவரி 18) கடல்மட்ட அளவு 3.1 மீட்டர் உயரத்தை எட்டலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
‘‘பொதுப் பயனீட்டுக் கழகம் வானிலை முன்னுரைப்பை அணுக்கமாகக் கண்காணித்து, தேவைப்படும்போது வெள்ள எச்சரிக்கைகளை விடுக்கும்,’’ என்று கழகம் கூறியது.