ஜனவரி 2 முதல், நான்கு சாலைகளில் ‘இஆர்பி’ கட்டணம் $1 உயருகிறது

ஜனவரி 2 முதல், நான்கு சாலைகளில் ‘இஆர்பி’ கட்டணம் $1 உயருகிறது

2 mins read
397b91ea-3051-401a-99cc-7ddb103d396c
பள்ளி விடுமுறைக் காலத்தில் சில பகுதிகளில் இஆர்பி கட்டணம் தற்காலிமாகக் குறைக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் சில சாலைகளில் ஜனவரி 2 முதல் மின்னியல் சாலைக்கட்டணம் (இஆர்பி) $1 உயர இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (நவம்பர் 17) தெரிவித்தது.

துவாசை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நார்த் புவன விஸ்தாவுக்கு அப்பால் உள்ள சாலையில் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை வாகனவோட்டிகள் $1 செலுத்துவர்.

தீவு விரைவுச்சாலைக்கு முன்னால் உள்ள மத்திய விரைவுச்சாலையின் வடக்குப் பகுதியில் மாலை 5.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்னியல் சாலைக் கட்டணம் $1 வசூலிக்கப்படும்.

அதேபோல, காலாங் - பாய லேபார் விரைவுச்சாலையில் டெஃபு மேம்பாலத்தைக் கடந்து செல்லும்போது காலை 8 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் $5 கட்டணம் வசூலிக்கப்படும்.

தீவு விரைவுச்சாலையில் காலாங் பாரு மற்றும் பெண்டமியருக்குச் செல்லும் துணைச் சாலையில் அமைந்துள்ள ‘இஆர்பி’ நுழைவாயில்களில் காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலும் காலை 9.30 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலும் $1 ‘இஆர்பி’ கட்டணம் வசூலிக்கப்படும்.

அந்த நுழைவாயில்களில் காலை 9 மணிக்கும் 9.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திற்கான ‘இஆர்பி’ கட்டணம் $2.

கட்டண உயர்வு குறித்து விளக்கிய நிலப் போக்குவரத்து ஆணையம், அக்டோபர் மாதம் வெவ்வேறு இடங்களுக்கு இட்டுச் செல்லும் பல விரைவுச்சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருந்ததாகச் சொன்னது.

அந்தப் பகுதிகளில் நெரிசலைச் சமாளிக்கும் நோக்கத்தில் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அது கூறியது.

கட்டண உயர்வு ஒருபக்கம் அறிவிக்கப்பட்டபோதிலும் சில சாலைகளுக்கான ‘இஆர்பி’ கட்டணம் தற்காலிகமாகக் குறைக்கப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஆண்டிறுதிப் பள்ளி விடுமுறைக் காலமான நவம்பர் 24 முதல் டிசம்பர் 31 வரை ஆறு பகுதிகளில் அந்தக் கட்டணம் குறைவாக இருக்கும்.

ஜனவரி 2 முதல் அவற்றில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் ஜூரோங் டவுன் ஹாலுக்குப் பின்னர் உள்ள நகரை நோக்கிய சாலையின் மூன்று நுழைவாயில்களில் காலை 7.30 மணி முதல் 8 மணி வரை $3 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல மாலை 5.30 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட சமயத்தில் ‘இஆர்பி’ கட்டணம் $2ஆக இருக்கும்.

பிரேடல் ரோட்டுக்கு அப்பால் மத்திய விரைவுச் சாலையின் தென்பகுதியிலும் தீவு விரைவுச் சாலையிலிருந்து மத்திய விரைவுச் சாலைக்கு இட்டுச் செல்லும் துணைச் சாலையிலும் உள்ள நான்கு நுழைவாயில்களிலும் குறைவான கட்டணம் வசூலிக்கப்படும்.

இதேபோல மேலும் பல நுழைவாயில்களில் டிசம்பர் 31 வரை ‘இஆர்பி’ கட்டணம் சற்று குறைவாக இருக்கும்.

போக்குவரத்து வேகத்தையும் நெரிசலையும் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்க இருப்பதாகவும் அதன் அடிப்படையில் ‘இஆர்பி’ கட்டணத்தைச் சரிசெய்ய வேண்டிய தேவை ஏற்படுமா என்பதை முடிவு செய்ய இருப்பதாகவும் ஆணையம் தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்