வரலாற்று திருப்புமுனையில் ஜப்பான், சீனா, தென்கொரியா சந்திப்பு

1 mins read
4b8594e2-9540-4d78-8efb-3605b9677f2a
(இடமிருந்து) சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தக்கேஷி இவாயா, தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ தே-யுவி. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: உலகில் பாதுகாப்பு, பொருளியல் நிச்சயமற்றதன்மை அதிகரிக்கும் நிலையில் ஜப்பான், தென்கொரியா, சீனாவைச் சேர்ந்த உயர்மட்ட அரசதந்திரிகள் ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் சனிக்கிழமை (மார்ச் 22ஆம் தேதி) சந்தித்தனர். 

“​கடுமையான உலகச் சூழலை கருத்தில் கொள்ளும்போது வரலாறு ஒரு திருப்புமுனைக்கு வந்துள்ளதாகவே நான் நம்புகிறேன்,” என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ தே-யுவி ஆகியோரை சந்திப்பதற்கு முன் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தக்கேஷி இவாயா கூறினார்.  ​

இந்த நாடுகளின் உச்சநிலை மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை விரைவுபடுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

உச்சநிலை மாநாட்டில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம், மூப்படைந்து வரும் மக்கள்தொகை ஆகியவை குறித்தும் தங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெறச் செய்ய அவை இணங்கின. இதை சந்திப்புக்குப் பிறகு மூன்று நாடுகளின் கூட்டு அறிவிப்பாக திரு இவாயா தெரிவித்தார்.   

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பல காலமாக நீடித்து வந்த நட்பு நாடுகளுடனான கூட்டணியை  கழற்றிவிட எண்ணும் நிலையில் இம்மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் 2023ஆம் ஆண்டுக்குப் பின் முதன் முதலாக சந்தித்து இருப்பது நினைவுகூரத்தக்கது. 

“​நமது மூன்று நாடுகளின் மக்கள்தொகை 1.6 பில்லியன். அத்துடன், நமது பொருளியல் உற்பத்தி அமெரிக்க டாலர் 24 டிரில்லியனை தாண்டியுள்ளது. நமது பரந்த அளவிலான சந்தை, ஆற்றலை வைத்துப் பார்க்கும்போது நம்மால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,” என்று திரு வாங் கருத்துரைத்தார்.  

குறிப்புச் சொற்கள்