கிளைகளை மூடுகிறது ‘ஜப்பான் ஹோம்’; ‘வேல்யூ டாலர்’ கைப்பற்றுவதாகத் தகவல்

கிளைகளை மூடுகிறது ‘ஜப்பான் ஹோம்’; ‘வேல்யூ டாலர்’ கைப்பற்றுவதாகத் தகவல்

2 mins read
44e5438d-2764-4cdd-88db-40c002e50a0f
சீமெய் வட்டாரத்தின் ஈஸ்ட்பாயன்ட் கடைத்தொகுதியில் உள்ள ‘ஜப்பான் ஹோம்’. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பிரபல வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிறுவனமான ‘ஜப்பான் ஹோம்’ கடந்த ஜூன் மாதம் முதல் தனது கிளைகளை மூடி வருகிறது.

இருப்பினும், அவற்றில் சில கிளைகள் ‘வேல்யூ டாலர்’ நிறுவனத்துடன் இணைந்து கூட்டு நிர்வாகத்தின்கீழ் மீண்டும் திறக்கப்படலாம் என ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் அவை தெரிவித்தன.

ஹவ்காங் மால், செஞ்சுரி ஸ்குவேர், நார்த்பாய்ன்ட் சிட்டி, ஹார்பர்ஃபிரன்ட் சென்டர், புவாங்கோக் ஸ்குவேர் ஆகிய கடைத்தொகுதிகளில் உள்ள தனது ஐந்து கிளைகளில் தள்ளுபடி விலையில் இறுதி விற்பனை நடைபெறுவதாக ஜூன், ஜூலை மாதங்களில் ‘ஜப்பான் ஹோம்’ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்திருந்தது.

அதேபோல, ‘ஜே ஃபன் அண்ட் கோல்ட்’ எனப்படும் உறுப்பினர் திட்டம் ஜூலை 21ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டதாக அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து புதிய பதிவுகளோ அல்லது புதுப்பித்தல்களோ அந்நிறுவனத்தால் ஏற்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் தங்களது ‘ஜே ஃபன்’ புள்ளிகள், ரொக்கச் சலுகைகள் மற்றும் வெகுமதிகளைப் பயன்படுத்திக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

‘பிஸ்னஸ் டைம்ஸ்’ செய்தித்தாள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) ஜப்பான் ஹோமின் ஒன்பது கிளைகளை நேரில் சென்று பார்வையிட்டது.

அவற்றில் மூன்று கிளைகள் மூடப்பட்டிருந்தன. சில கிளைகள் இருப்புச் சரிபார்ப்புக்காக கதவுகளை மூடியிருந்தன. மேலும், சில கடைகளில் கணிசமான அளவில் ‘வேல்யூ டாலர்’ பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

பிடோக் மால் கடைத்தொகுதியில் உள்ள கிளை திறந்திருந்தபோதிலும், அங்குள்ள சில அலமாரிகளில் ‘வேல்யூ டாலர்’ நிறுவனத்தின் பல்வேறு பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

நிர்வாக மாற்றம் காரணமாகவே கிளைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ‘ஜப்பான் ஹோம்’ ஊழியர்கள் கூறினர். மேலும் சில ஊழியர்கள், ‘ஜப்பான் ஹோம்’ நிறுவனம் முழுமையாக வேல்யூ டாலர் நிறுவனத்திடம் விற்கப்பட்டுவிட்டதாகத் தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்