சிங்கப்பூரின் விமானச் சரக்கு, தளவாட நிறுவனமான சேட்ஸ், குவைத்தின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஜஸீரா ஏர்வேசுக்குப் பொருள்களை ஏற்றிச்செல்லும் நடவடிக்கைகளில் ஆதரவளிக்கவிருக்கிறது.
சவூதி அரேபியாவின் டாமம் நகரத்தில் உள்ள கிங் ஃபாத் அனைத்துலக விமான நிலையத்தில் செயல்படும் ஜஸீரா ஏர்வேசின் விமானங்களுக்கு உதவி நல்க சேட்ஸ் முடிவெடுத்துள்ளது.
மத்திய கிழக்குப் போரால் குவைத் அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜஸீரா ஏர்வேஸ், குவைத்துக்கு மாற்று இணைப்புகளை நிறுவியுள்ளது. அவை டாமமிலும் கைசுமா-ஹஃபார் அல்-பத்தின் அனைத்துலக விமான நிலையத்திலும் அமைந்துள்ளன.
சேட்ஸ் நிறுவனத்திற்கு டாமமில் சரக்குகளைக் கையாள 60,000 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட நிலையமொன்று உள்ளது.
புதிய ஏற்பாட்டின்படி, டாமமிலிருந்து இயங்கும் ஜஸீராவின் ஏர்பஸ் ஏ320நியோ விமானச்சேவையின் சரக்குகளை சேட்ஸ் கையாளும்.
டாமமில் உள்ள சேட்ஸ் நிலையம் சென்ற மாதம் (மார்ச்) 26ஆம் தேதியிலிருந்து ஜஸீராவின் சரக்குகளைக் குவைத்தில் சேர்ப்பதற்கான சேவைகளை வழங்கிவருகிறது. பொதுவான சரக்குகள், கெட்டுப்போகக்கூடிய இறைச்சி, பழங்கள், காய்கறிகள் முதலியவை அவற்றுள் அடங்கும். அவை நிலம் வழியாகக் குவைத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
கைசுமா-ஹஃபார் அல்-பத்தின் அனைத்துலக விமான நிலையத்தில் ஜஸீரா ஏர்வேஸ் சென்ற மாதம் 11ஆம் தேதி அதன் சேவைகளைத் தொடங்கியது.
பொருள்களை எல்லை கடந்து கொண்டுசெல்லும் சேவை, ‘பராக்கா திட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சேட்ஸ் அப்பெக் கேட்வே சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் சி, ஜஸீரா ஏர்வேசுடன் கைகோத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
“இந்தச் சவாலான காலகட்டத்தில் குவைத்துக்குப் பயணிகள் செல்வதும் உணவு, மருந்துப்பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுசெல்லப்படுவதும் உறுதிசெய்யப்படும் என நம்புகிறோம்,” என்றார் அவர்.
ஜஸீரா ஏர்வேசின் தலைமை நிர்வாக அதிகாரி பரதன் பசுபதி, குவைத்துடன் ஆகாய-நில வழி இணைப்பைக் கொண்டிருப்பது முக்கியம் என்றார். பொருள்கள் தடையின்றிச் சென்றுசேரும் முயற்சியில் சேட்சின் பங்கு முக்கியமானது என்று அவர் சொன்னார்.

