கடற்பாலத்தின் நூற்றாண்டு நிறைவு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக்கூடும்

கடற்பாலத்தின் நூற்றாண்டு நிறைவு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக்கூடும்

2 mins read
ca412f7c-2427-44cb-8ece-e6ca30004189
ஜோகூர் மாநிலத்தையும் சிங்கப்பூரையும் இணைக்கும் கடற்பாலத்தின் கட்டுமானம் 1919ஆம் ஆண்டு தொடங்கி, பின்னர் 1924 ஜூன் 28ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: ஜோகூர் கடற்பாலத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் நிலவழிப் பயணத்துக்கு முக்கிய இணைப்பாகத் திகழும் கடற்பாலத்தில் ஜூன் 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோகூர் கடற்பாலத்தின் கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை நீடிக்கும் என்பதால், அந்த நாளில் கடற்பாலத்தைப் பயன்படுத்துவோர் தங்கள் பயணத்தை முன்னதாகவே திட்டமிடும்படி ஜோகூர் மாநில முதல் அமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸி தமது ஃபேஸ்புக் பதிவில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜோகூர் மாநில இளையர், விளையாட்டு, தொழில்முனைப்பு மேம்பாட்டு, கூட்டுறவுக் குழுத் தலைவர் முகம்மது ஹைரி மாட் ஷா, “இந்த நூற்றாண்டு நிறைவு ஜோகூர்-சிங்கப்பூர் உறவில் ஒரு குறிப்பிடத்தக்க கொண்டாட்டம்,” என்றார்.

ஜோகூர் மாநிலச் செயலகத்தின் தலைவரும் ஜோகூர் கடற்பாலத்தின் நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டக் குழுவின் தலைவருமான திரு முகம்மது ஹைரி, “ஜோகூர் மாநிலத்தையும் சிங்கப்பூரையும் இணைக்கும் கடற்பாலத்தின் கட்டுமானம் 1919ஆம் ஆண்டு தொடங்கியது. பின்னர் 1924 ஜூன் 28ஆம் தேதியன்று, அப்போது ஜோகூரை ஆட்சி புரிந்த காலஞ்சென்ற சுல்தான் இப்ராகிம் இப்னி சுல்தான் அபு பக்கர் தலைமையில் அது திறப்புவிழா கண்டது.

“அப்படி என்றால் நமது இரு நாடுகளும் சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்தக் கடற்பாலம் கட்டப்பட்டுள்ளது. வாருங்கள், நாம் அனைவரும் இந்த வரலாற்று சிறப்புவாய்ந்த கட்டுமானத்தின் உருவாக்கத்தை நன்றியுணர்வுடன் கொண்டாடுவோம்,” என்றும் திரு முகம்மது ஹைரி தெரிவித்தார்.

கடற்பாலத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை நேரில் பார்க்க முடியாதோர், ஜோகூர் தோக்கோ அரும்பொருளகத்துக்கு வருகை புரியுமாறு திரு முகம்மது ஹைரி கேட்டுக்கொண்டார். அங்கு ஜோகூர் கடற்பாலத்தின் உருவாக்கம் முதல் இன்று வரையிலான செயல்பாட்டைப் பற்றி அறிந்துகொள்ளலாம் என்று தி ஸ்டார் நாளிதழின் செய்தி குறிப்பிடுகிறது.

குறிப்புச் சொற்கள்