ஜோகூர் பாரு: வாகன நுழைவு அனுமதித் திட்டம் (விஇபி) அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, ஜோகூருக்குச் செல்லும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஜோகூருக்குச் செல்லும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை படிப்படியாக மேம்பட்டு வருவதாக ஜோகூரில் உள்ள சில வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஜோகூருக்குச் செல்லும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜோகூர் பாரு வர்த்தக, உணவு அங்காடி நிலையச் சங்கத்தின் தலைவர் ரோலண்ட் லிம் கூறினார்.
இருப்பினும், ஜோகூருக்குச் செல்லும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை முன்பு அதிகமாக இருந்ததாகவும் தற்போது அந்த அளவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“தற்போதைய நிலவரப்படி, நிலைமை இன்னும் வழக்கநிலைக்குத் திரும்பவில்லை. ஆனால், ஜோகூருக்கு வருகைதரும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கூடிய விரையில் வழக்கநிலைக்குத் திரும்பிவிடும் என்று நம்புகிறோம்,” என்றார் திரு லிம்.
அவர் ஜோகூர் பாரு நகர மையத்தில் காப்பிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
நிலவழிச் சோதனைச்சாவடிகள் வழியாக ஜோகூருக்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களின் எண்ணிக்கை அம்மாநிலத்துக்குச் செல்லும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கும் என்று கூறிவிட முடியாது என்றார் ஜோகூர் சுற்றுப்பயண வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவர் ஜிம்மி லியோங்.
ஜோகூருக்குச் செல்லும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை மேம்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு லியோங், அந்த எண்ணிக்கை இன்னும் வழக்கநிலைக்குத் திரும்பவில்லை என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஜோகூரில் உள்ள கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு முன்பு அந்த இடங்களில் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
“ஜோகூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிங்கப்பூரில் பணிபுரிகின்றனர். அவர்கள் வார இறுதிகளில் ஜோகூருக்குத் திரும்புகின்றனர். இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் காரணமாக நிலவழிச் சோதனைச்சாவடிகள் வழியாக ஜோகூருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக்கூடும்,” என்றார் திரு லியோங்.

