சுவா சூ காங் குழுத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட திரு ஜெஃப்ரி சியாவ் புதிய அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பிரதமர் லாரன்ஸ் வோங் தமது அமைச்சரவையைத் தீர்மானிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி சார்பில் ஜெஃப்ரி சியாவ், தினேஷ் வாசு தாஸ், டேவிட் நியோ உள்ளிட்ட 32 புதுமுகங்கள் களமிறங்கினர். மேலும் மூத்த அமைச்சர்கள், அமைச்சர்கள் சிலர் அரசியலிலிருந்து தங்கள் ஓய்வை அறிவித்தனர்.
இதனால் அமைச்சரவையில் புதுமுகங்கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே திரு சியாவ், சனிக்கிழமை (மே 17) கியட் ஹோங் கடைத்தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
“தற்போது பிரதமர் வோங் தமது அமைச்சரவை அணியைத் தயார் செய்து வருகிறார். அவர் அமைச்சரவை பொறுப்பு குறித்து என்னிடம் பேசினார். அதேபோல் மற்றவர்களிடமும் பேசி வருகிறார்,” என்றார் திரு சியாவ்
பிரிக்லேண்ட் வட்டாரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திரு சியாவிடம், எந்த அமைச்சில் அவர் அங்கம் வகிப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை,” என்று பதிலளித்தார்.
“அமைச்சரவை தயார் செய்ய சில காலம் பிடிக்கும். இது முக்கியமான முடிவு என்பதால் பிரதமர் வோங் அவருக்கான நேரத்தை எடுத்துக்கொள்வார். அமைச்சரவைக்கு என் பெயரை அவர் பரிசீலித்தது மகிழ்ச்சி தருகிறது,” என்றார் திரு சியாவ்.
தொடர்புடைய செய்திகள்
“எனது அனுபவம், திறன் உள்ளிட்டவற்றைப் பிரதமர் தெரிந்து கொண்டது உற்சாகம் அளிக்கிறது. என்னால் அமைச்சரவை அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து பிரதமர் முடிவெடுப்பார்,” என்று திரு சியாவ் குறிப்பிட்டார்.
24 ஆண்டுகளுக்கு மேல் பொதுச் சேவையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் திரு சியாவ்.
அவர் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை முதன்மை உதவியாளராகப் பணியாற்றினார்.