தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூலை 31ல் ஜெட்ஸ்டார் ஏஷியா விமானச் சேவை முடிவுறும்; 500 ஊழியர்கள் பாதிப்பு

2 mins read
ed6afa62-bdfa-456e-ba15-f41f42f69be1
ஜெட்ஸ்டார் ஏஷியா தனது விமானச் சேவையை முழுமையாக நிறுத்துமுன் அடுத்த ஏழு வாரங்களுக்கு படிப்படியாக அதை குறைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெட்ஸ்டார் ஏஷியா விமானச் சேவை நிறுவனம் தனது சேவையை ஜூலை 31ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள உள்ளது.

ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் அதன் தலைமை நிறுவனமான குவாண்டாஸ் எடுத்துள்ள முக்கிய உருமாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜெட்ஸ்டார் ஏஷியா விமானச் சேவை முடிவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 500க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. எனினும், அவர்களுக்குப் பல வகைகளில் ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையிழப்போருக்கு பணிநீக்கப் பலன்கள், குவாண்டாஸ் நிறுவனத்திலோ அல்லது மற்ற நிறுவனங்களிலோ மறுவேலைவாய்ப்பு போன்றவை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆட்குறைப்பு செய்யப்படுவோருக்கு அவர்கள் பணியில் இருந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் நான்கு வாரச் சம்பளம், இந்த நிதியாண்டுக்கு போனஸ், நன்றிகூறும் விதமாக சிறப்புத் தொகை, இதர அனுகூலங்கள் வழங்கப்படும்.

ஜெட்ஸ்டார் ஏஷியா தனது விமானச் சேவையை முழுமையாக ஜூலை 31ஆம் தேதி நிறுத்துமுன் அடுத்த ஏழு வாரங்களுக்கு படிப்படியாக அதை குறைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆசிய நாடுகளுக்கு இடையிலான 16 விமானச் சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆசியாவுக்கான ஜெட்ஸ்டார் ஏர்வேஸ், ஜெட்ஸ்டார் ஜப்பான் விமானச் சேவைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

அத்துடன், ஜெட்ஸ்டார் ஏர்வேஸின் அனைத்துலக சேவைகளிலும் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

ஜெட்ஸ்டார் ஏஷியா மூடலால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளப்பட்டு அவர்களுக்கு முழுக் கட்டணமும் திருப்பித் தரப்படும் அல்லது மாற்று விமானச் சேவைக்கு சாத்தியம் இருந்தால் அது செய்து தரப்படும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் முனையம் நான்கில் தனது சேவையை வழங்கும் ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனம் தனது வாடிக்கையாளர் தகவலுடன் ஓர் இணையப்பக்கத்தை வைத்திருப்பதாகவும் அதில் அப்போதைக்கு அப்போது ஆகக் கடைசி தகவல்கள் வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

அண்மைய ஆண்டுகளில் உயர்ந்து வரும் விநியோகிப்பாளர் செலவினம், விமான நிலையக் கட்டணங்கள், விமானச் சேவை கட்டணம் போன்றவற்றால் ஜெட்ஸ்டார் நிறுவனம் தனது விமானச் சேவையை நிறுத்திக்கொள்ளும் முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்