ஜெட்ஸ்டார் வாடிக்கையாளர்களுக்கு $11.4 மில்லியன் திருப்பித் தர உத்தரவு

ஜெட்ஸ்டார் வாடிக்கையாளர்களுக்கு $11.4 மில்லியன் திருப்பித் தர உத்தரவு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Sep 2026 - 11:52 am

2 mins read

சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஏஷியாவின் வாடிக்கையாளர்கள் 194,000 பேர், பயன்படுத்தப்படாத முன்பதிவுகள் மற்றும் பற்றுச்சீட்டுகளுக்காக மொத்தம் 11.4 மில்லியன் வெள்ளித் தொகையைத் திரும்பப் பெறலாம்.

இதற்காக எந்தவோர் ஆதாரத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இது தொடர்பான எழுத்துபூர்வமான காரணங்கள் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) வெளியிடப்பட்டன.

தென்கிழக்காசியா மற்றும் ஜப்பானில் தனது வர்த்தகத்தை நிறுத்துவதற்குத் தாய் நிறுவனமான குவாண்டாஸ் எடுத்த முடிவின் ஒரு பகுதியாக, விமான நிறுவனம் முன்மொழிந்த சீரமைப்புத் திட்டத்திற்கு நீதிபதி கிறிஸ்டோபர் சொன்சி மே 21ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.

வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரவும், மற்ற பொறுப்புகளை நிறைவேற்றவும் நிதி ஆதரவைப் பெற்ற பிறகு, ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனம் சிங்கப்பூரில் தனது வர்த்தகத்தை 2025ஆம் ஆண்டில் முடித்துக்கொள்கிறது.

பயணச்சீட்டுகள், முன்பதிவுகள் அல்லது பற்றுச்சீட்டுகளைக் கொண்ட வாடிக்கையாளர்களை நிர்வாக வசதிக்காக ஒரு தனிப் பிரிவின்கீழ் வைப்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்தப் பிரிவின்கீழ் உள்ளவர்கள், சீரமைப்புத் திட்டத்தில் வாக்களிப்பதிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக, இந்த வாடிக்கையாளர்கள் எந்தவொரு கடன் ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவோ, இது தொடர்பில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவோ தேவையில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டது.

2026 ஜனவரி நிலவரப்படி இத்தகைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 194,000ஆக உள்ளது.

அவர்களில் 146,000 பேரிடம் 20 வெள்ளிக்கும் குறைவான பயன்படுத்தப்படாத பற்றுச்சீட்டுகள் உள்ளன.

முன்பதிவு செய்தவர்களுக்குச் சராசரியாக 161.67 வெள்ளியும் பற்றுச்சீட்டுகள் வைத்துள்ளவர்களுக்குச் சராசரியாக 58.03 வெள்ளியும் கிடைக்கும் எனத் தெரிகிறது.

சிறிய தொகைகளுக்காக இத்தனை பேரை வாக்களிக்கச் செய்வது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றும் அதற்குச் செலவு அதிகம் பிடிக்கும் என்றும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பயனீட்டாளர் அல்லாத மற்ற கடன் வழங்குநர்கள் ஏப்ரல் 15ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இத்திட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

பெரிய தொகைகளைக் கோரும் அவர்களுக்குத் தங்கள் சட்ட உரிமைகள் நன்கு தெரியும். எனவே அவர்கள் கடன் ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சிறிய தொகைகளைக் கோரும் வாடிக்கையாளர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிப்பது நியாயமானதே என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்