சிங்கப்பூரில் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடக்கும் விமானக் கண்காட்சியில் பல முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அவற்றில் ஒன்றாக, சிங்கப்பூர் ஏரொ என்ஜின் சர்வீசஸ் (SAESL) நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டத்துக்கான ஒப்பந்தம், பொருளியல் வளர்ச்சிக் கழகத்துடன் வியாழக்கிழமை (பிப்ரவரி 5) கையெழுத்திட்டுள்ளது.
மேலும் அந்த நிறுவனம் பயிற்சி நிலையம் ஒன்றையும் உள்ளூர் உயர்கல்விக் கழகங்களுடன் இணைந்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்வழியாக விமான இயந்திரங்களைப் பராமரிக்கும் சேவை மேம்படுத்தப்படும் என்று அறியப்படுகிறது.
எஸ்ஏஇஎல் நிறுவனம் உலகின் மிகப்பெரிய விமானப் பழுது பார்ப்புச் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். பொதுமக்களுக்கு பிப்ரவரி 7ஆம் தேதியும் 8ஆம் தேதியும் திறக்கப்படவுள்ள விமானக் கண்காட்சிக்கு முன்பு பிப்ரவரி 5ஆம் தேதி (வியாழக்கிழமை) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிறுவனத்தின் இந்த ஒப்பந்தத்தின்படி அதன் தொழிலாளர் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் விமானப் பராமரிப்பு சீரமைப்புச் சேவைகளை மேம்படுத்தும் இலக்கை அடையும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 2,000 திறன்வாய்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களை எஸ்ஏஇஎல் நிறுவனம் கொண்டுள்ளது. ஆகவே அதன் வருங்கால வளர்ச்சிக்கும் உருமாற்றத்துக்கும் அதிக பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

