பயணத்துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளதாகச் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.
“2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ‘மைகரியர்ஸ்ஃபியூச்சர்’ (MyCareersFuture) வேலை தேடும் தளத்தில் 6,700க்கும் அதிகமான வேலைகள் விளம்பரப்படுத்தப்பட்டன. அதில், 5,000க்கும் அதிகமான வேலைகள் பயணத்துறை சார்ந்தது,” என்று கழகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்நிலையில், ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாத் தலங்கள், பயண நிறுவனங்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கிட்டத்தட்ட 700 வேலை வாய்ப்புகளைப் புதிதாக அறிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் பயணத்துறையின் மாநாடு முதல்முறையாக நடந்தது. அதில் அந்த வேலை வாய்ப்புகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டன.
தரவு மேலாண்மை, தொழில்துறை அறிவாற்றல் நிபுணர் உள்ளிட்ட பல வேலைகளுக்குத் தற்போது ஆள்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த ஒருநாள் மாநாட்டில் மாணவர்கள், புதிய பட்டதாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
“மாநாட்டின் முக்கிய நோக்கம் பயணத்துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவர்களும் புதிய பட்டதாரிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே,” என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.
இனிவரும் மாதங்களிலும் பயணத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோட்டல் வாட்டர்லூ சிங்கப்பூர், டிரிபியூன் போர்ட்ஃபோலியோ ஹோட்டல் ஆகியவை 2026ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளன. அவற்றில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட ஹோட்டல் அறைகள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு ஜூன் மாத தரவுகளின்படி சிங்கப்பூரின் பயணத்துறையில் 75,000 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டுத் தரவுகளின்படி 69,000 பேர் பயணத்துறையில் பணியாற்றி வந்தனர்.
2040ஆம் ஆண்டில் பயணத்துறை எப்படி இருக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு தற்போது சிங்கப்பூர் உத்திபூர்வமாகச் செயல்பட்டு வருவதாகப் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.