ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரவாசிகளுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளித்தரும் ஒரு புதிய திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியுடன் இணைந்து தொடங்கப்பட்ட ‘கிழக்கு வட்டார சிறந்த பணிகள்’ (East Side Best Careers) எனும் அத்திட்டம், அக்குழுத்தொகுதியால் முன்னெடுக்கப்படும் ஓராண்டுகாலத் திட்டமாகும்.
முதலாளிகள், தொழில் வழிகாட்டுதல்கள், திறன் மேம்பாட்டு ஆதரவு ஆகியவற்றை நேரடியாகச் சமூகத்திற்குக் கொண்டுவர இத்திட்டம் முற்படும்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி ஆலோசகர்களான சட்ட அமைச்சர் எட்வின் டோங், தகவல், மின்னிலக்க மேம்பாடு, சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், ஆலோசகர் ஜெசிகா டான் ஆகியோர் ஹார்ட்பீட் @ பிடோக் வளாகத்தில் புதன்கிழமை (ஜனவரி 14) இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.
சிறப்புரையாற்றிய உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங், வேலை வாய்ப்பு குறித்த கவலைகளை மக்கள் சந்திப்புக் கூட்டம், வழக்கமான இல்லச் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றின்போது குடியிருப்பாளர்கள் தம்மிடமும் சக ஆலோசகர்களிடமும் பகிர்ந்துகொண்டுள்ளதாகச் சொன்னார்.
இத்திட்டத்தின்மூலம் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரவாசிகள் தாங்கள் குடியிருக்கும் இடங்களுக்கு அருகிலேயே வேலை வாய்ப்புகளைத் தேடலாம். குறிப்பாக, சாங்கி விமான நிலையத்தில் வழங்கப்படும் வாய்ப்புகள் சிறந்த தெரிவாக அமையக்கூடும்.
“இந்த அணுகுமுறையானது ‘அருகிலுள்ள வேலைகள்’ (Jobs Nearby) தொடக்க விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்ட கருத்துடன் ஒத்துப்போகிறது. மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகளைக் கொண்டுவருவது முக்கியம் என்றும், அதன்மூலம் தனிமனிதர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வேலை என்பது ஒரு நீடித்த, நிலையான ஒன்றாக அமையும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்,” என்று அமைச்சர் டோங் கூறினார்.
சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம் பல வேலை வாய்ப்புகளை வழங்கும் என்ற திரு டோங், விமானத்துறைக்கு அப்பாற்பட்டு, பொறியியல், தொழில்நுட்பம், வணிக வளர்ச்சி ஆகிய துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வேலை வாய்ப்புகளையும் தாண்டி இளம் பட்டதாரிகள், முதன்முறையாக வேலை தேடுவோருக்கு உதவும் விதமாக ஈஸ்ட் கோஸ்ட் வேலைப்பயிற்சித் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு துறைகளில் மொத்தம் 17 நிறுவனங்கள் 50 வேலைப்பயிற்சி வாய்ப்புகளை வழங்கவுள்ளன.
சிங்கப்பூர்ப் பொது விமானப் போக்குவரத்து ஆணையம், வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகம் போன்ற பங்காளி அமைப்புகள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய துணையமைச்சர் தினேஷ், இத்திட்டம் ஓராண்டு காலத்திற்கு மட்டும் செயல்படாமல் சில ஆண்டுகளுக்குச் செயல்படும் என்றும் வேலை வாய்ப்புகளை மட்டும் வழங்காமல் எதிர்காலத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொருளியல் ரீதியாக சூழல் நிச்சயமற்றதாக இருப்பதால் இத்திட்டம் ஒரு முக்கியமான தேவை என்று செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் டோங், 10,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் சொன்னார்.
“அதிக பங்காளிகள் சேர்ந்தால் நன்றாக இருக்கும். அதே நேரத்தில், வேலை தேடும் ஒருவரை தயார்ப்படுத்துவதும் மிக முக்கியம்,” என்றும் அவர் கூறினார்.

