சிங்கப்பூரில் வேலை தேடுவோருக்கும் வேலை தருவோருக்கும் இடையிலான பொருத்தம் அமைவது கடந்த ஆண்டு கடினமாக இருந்தது என்று ‘லிங்க்டுஇன்’ சமூக ஊடகத் தளம் தெரிவித்து உள்ளது.
தேவைப்படும் திறன்களில் வேகமான மாற்றம் ஏற்பட்டு வருவதை அந்த நிலவரம் உணர்த்தியதாகவும் அது கூறியது.
இங்குள்ள 10ல் 6 ஊழியர்கள், அதாவது 60 விழுக்காட்டினர் 2024ஆம் ஆண்டு தங்களுக்குப் பொருத்தமான வேலையைத் தேடுவது கடினமாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரிலும் இதரச் சந்தைகளிலும் நிலவிய உலகளாவிய சராசரியான 50 விழுக்காட்டைக் காட்டிலும் இது அதிகம்.
‘லிங்க்டுஇன்’ இணையத்தளம் வியாழக்கிழமை (ஜனவரி 16) வெளியிட்ட ஆய்வறிக்கையில் அந்த விவரம் இடம்பெற்று உள்ளது.
சிங்கப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் அந்நிறுவனம் ஆய்வு நடத்திய பின்னர் அதன் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
தங்களது சொந்தத் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைகளைத் தேடுவதில் சிரமம் இருந்தது என்பது பொதுவான கருத்தாக ஊழியர்களிடம் தென்பட்டது.
அதற்கு அடுத்து, சம்பளம் மற்றும் சலுகைகளுக்கான பேரம் பேசுவது ஒரு பிரச்சினையாக இருந்தது. இவற்றுடன் வேலை விண்ணப்பத்தைத் தனித்துவமிக்கதாக உருவாக்குவதும் ஒரு சவாலாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், ஆய்வில் பங்கேற்றோரில் 65 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் 2025ஆம் ஆண்டிலும் பொருத்தமான வேலை தேடுவதைத் தொடரப்போவதாகக் கூறினர்.
குறிப்பாக, நல்ல சம்பளம், வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைத்தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த இருப்பதாக இளம் ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஊழியர்கள் நிலவரம் இவ்வாறிருக்க, முதலாளிகளும் பொருத்தமான ஊழியர்களைத் தேடுவதில் கடந்த ஆண்டு சிரமத்தை எதிர்நோக்கினர்.
‘லிங்க்டுஇன்’ ஆய்வில் பங்கேற்ற 500 வேலை நியமின நிபுணர்கள் அவ்வாறு கூறி உள்ளனர்.
தேவைப்படும் தகுதியும் திறனும் உடையோரைத் தேடுவது அதிக சவாலாக இருந்தது என்றனர் அவர்கள்.
அவர்களில் 3.4 விழுக்காட்டினருக்கு மட்டுமே பொருத்தமான ஊழியர்கள் கிடைத்தனர். அறிவிக்கப்பட்ட வேலைக்குத் தேவையான கல்வித்தகுதிகளுடன் விண்ணப்பங்களைப் பெற்றதாக ஆய்வில் அவர்கள் கூறினர்.
அதேநேரம், விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்ட விவரங்கள், நிறுவனங்களுக்குத் தேவையான திறன் நிபுணத்துவத்துடன் பொருத்தமின்றி இருந்ததாக ஏறக்குறைய 80 விழுக்காட்டு வேலை நியமன நிபுணர்கள் குறிப்பிட்டனர்.