பெரும்பாலான ஜெட்ஸ்டார் ஏஷியா ஊழியர்களுக்கு வேலை உறுதி

2 mins read
d00495c6-562a-4d63-8f9b-bab7cc77f458
ஜூன் மாதத்தில் ஜெட்ஸ்டார் ஏஷியா வளாகத்தில் மூன்று நாள் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் தளம்கொண்டுள்ள ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதைத் தொடர்ந்து, வேலை இழந்த விமானிகள், விமானப் பணியாளர்கள் ஆகியோரில் பெரும்பாலானோருக்கு வேலை அல்லது வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் கிட்டியுள்ளதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.

ஜெட்ஸ்டார் ஏஷியா தனது சேவைகளை நிறுத்திக்கொள்வதாக ஜூன் மாதம் அறிவித்ததை அடுத்து, இங்கு அந்நிறுவனத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்தனர். 

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவுவதில் என்டியுசி உறுதியுடன் செயல்படுவதாக அந்நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது.

ஜூன் மாதத்தில் ஜெட்ஸ்டார் ஏஷியா வளாகத்தில் மூன்று நாள் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதில் அறிவிக்கப்பட்ட 1,400 காலிப் பணியிடங்களுக்கு 450க்கும் மேற்பட்ட வேலைகள் வழங்கப்பட்டன.

வேலை இழந்த ஊழியர்களின் நிலை குறித்துத் தகவல் அளித்த திரு இங், பாதிக்கப்பட்ட விமானிகள், விமானப் பணியாளர்கள் ஆகியோரில் 90 விழுக்காட்டினர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்  குழுமம் மற்றும் மரினா பே சாண்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் நேர்முகத் தேர்வு அல்லது வேலைகளைப் பெற்றுள்ளனர் என்று புதன்கிழமை (செப்டம்பர் 10) தெரிவித்தார்.

அண்மையில், ஜெட்ஸ்டார் ஏஷியாவின் முன்னாள் ஊழியர்களில் பலர் தற்போது எஸ்ஐஏ குழுமத்தின் மலிவுச் சேவை விமான நிறுவனமான ஸ்கூட் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் திரு இங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் மூடல் தொடர்பிலான சவால்களையும் பதற்றங்களையும் எதிர்கொண்டவாறே புதிய தந்தை ஒருவர் தமது இரண்டாவது குழந்தையை வரவேற்றது உள்பட பல்வேறு அனுபவக் கதைகள் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக திரு இங் கூறினார். 

“புதிய தொழில்நுட்பங்களுக்கும் புதிய நிறுவன கலாசாரத்திற்கும் ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்வது பற்றி நடுத்தர வயதில் இருக்கும் ஊழியர்கள் தங்கள் கவலைகளையும் வெளிப்படுத்தினர்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜெட்ஸ்டார் ஏஷியாவின் ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான முயற்சிகளுக்கு எஸ்ஐஏ குழுமம், ஸ்கூட் உட்பட பல நிறுவனங்கள் முதன்மையான ஆதரவை வழங்குவதாக என்டியசி, ஜூன் மாதம் தெரிவித்திருந்தது. 

ஜூன் மாதம் நடந்த வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற நிறுவனங்களில் ஏர்பஸ் சிங்கப்பூர் அன்ட் சாட்டைர், சாங்கி விமான நிலையக் குழுமம், சாட்ஸ், எஸ்ஐஏ இன்ஜினியரிங் நிறுவனம், எஸ்எம்ஆர்டி, சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை அடங்கும்.

20 ஆண்டுகளுக்கும் மேலான நீடித்த சேவைகளுக்குப் பின், ஜெட்ஸ்டார் ஏஷியா ஜூலை 31ல் சாங்கி விமான நிலையத்திலிருந்து தனது கடைசி விமானச் சேவையை இயக்கியது.

மூடலுக்கு முன்பு, விநியோகச் செலவுகள், விமான நிலையக் கட்டணங்களின் உயர்வு, குறைந்த கட்டண விமான நிறுவனங்களுக்கிடையே அதிகரித்து வந்த போட்டி போன்ற சவால்களை அந்த விமான நிறுவனம் சந்தித்து வந்தது.

குறிப்புச் சொற்கள்