பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளையர்கள், புதிய துறைக்கு மாறத் துடிக்கும் அனுபவமிக்க ஊழியர்கள், வாழ்க்கைத் தொழிலில் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கும் மூத்த ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒரே கூரையின்கீழ் திரள, ‘எஸ்பிஎச் மீடியா கரியர் எக்ஸ்போ 2026’ வேலைக் கண்காட்சி சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்திவரும் இன்றைய சூழலில் வேலைதேடுவோருக்கு வழி காட்டி புதிய கதவுகளைத் திறந்துவிடும் இலக்குடன் அந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 22, 23ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
எஸ்பிஎச் மீடியா ஏற்பாடு செய்துள்ள அக்கண்காட்சியில், சாங்கி விமான நிலையக் குழுமம், எஸ்எம்ஆர்டி, சிங்கப்பூர்ச் சிறைத் துறை, சிங்ஹெல்த், ஸ்கூட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் என்டியுசி கற்றல் நடுவம் போன்ற முன்னணித் திறன் பயிற்சி அமைப்புகளும் நேரடியாகப் பங்கேற்றுள்ளன.
நேரடி வேலைவாய்ப்புகள் மட்டுமன்றி, நேர்காணலுக்குச் செல்பவர்களைத் தயார்படுத்தும் வகையில் பல சாவடிகளும் இந்த நிகழ்ச்சியின் அரங்கில் இடம்பெற்றுள்ளன.
‘ஜி2000‘ நிறுவனத்தின் அலுவலக உடை குறித்த தோற்ற அலங்கார வழிகாட்டல், வேலை விண்ணப்பத்திற்கான புகைப்படம் குறித்த இலவசப் புகைப்படச் சேவை, ‘ஏகேஜி சிங்கப்பூர்’ வழங்கும் இலவசச் சுயவிவரக் குறிப்பு குறித்த ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கும் சாவடிகளில் பலர் வரிசையில் நின்றதோடு, அந்த வழிகாட்டுதல்கள் புதுமையாக உள்ளதாகவும் கூறினர்.
களத்தில் கேட்கும் வேலைதேடுவோரின் குரல்கள்
வாழ்க்கைத்தொழில் வழிகாட்டலைத் தேடி முதன்முறையாகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த 24 வயது முகமது இப்ராஹிம், “எனக்கு வழிகாட்ட யாருமில்லை. பல நிறுவனங்களை ஒரே இடத்தில் நேரடியாகச் சந்தித்து உரையாட இந்த ஒருங்கிணைந்த தளம் மிகவும் உதவியாக உள்ளது,” என்று கூறினார்.
தம் மனைவிக்காக வேலைவாய்ப்பை நாடி ஜோகூரிலிருந்து வந்திருந்த 29 வயது தர்ஷன் ஐயர், “வாடிக்கையாளர் சேவைத் துறையில் வேலை தேடுகிறோம். இங்கு நிறுவனங்கள் சலுகைகள், வளர்ச்சிப் பாதைகளை நேரில் விளக்குவது பெரிய தெளிவைத் தருகிறது,” எனக் குறிப்பிட்டார்.
மூன்று மாதங்களாகப் பிடித்தமான வேலைக்காகக் காத்திருக்கும் இளம் பட்டதாரி கதிரவன், 29, “இணையத்தில் தனியாகத் தேடுவதைவிட, பல நிறுவன அதிகாரிகளை ஒரே இடத்தில் சந்திப்பது வேலை தேடும் முயற்சியை மிகவும் எளிதாக்குகிறது,” என்றார்.
47 வயது கார்த்திக் கிருஷ்ணன், பல்லாண்டுகள் அனுபவம் இருந்தும் இணையப் பாதுகாப்புத் துறைக்கு மாற கண்காட்சிக்குச் சென்றார். “அதிக சம்பளமும் தேவையும் உள்ள துறைக்கேற்ற திறன்களை வளர்த்துப் புதிய வாய்ப்பைப் பெற இதுவே சரியான இடம்,” என்று அவர் கூறினார்.
வேலை, சம்பளம், வருங்கால வளர்ச்சி தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் துறைசார் வல்லுநர்களிடமிருந்து பதில்களைப் பெற்றுத்தரும் முனைப்புடன் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, இம்முறை ஏறத்தாழ 11,000க்கும் அதிகமானோரை ஈர்க்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


