இவ்வாண்டின் 3வது காலாண்டில் சிங்கப்பூரில் வசிப்போருக்கான வேலை வாய்ப்பு, அதிக திறன் மற்றும் அதிக ஊதியம் வழங்கப்படும் துறைகளில் வலுவான வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், பொதுவாக வேலை வாய்ப்பு குறைந்தது. இருந்தாலும், வேலையில்லாதவர்களைவிட அதிக காலியிடங்கள் இருந்தன.
டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட மனிதவள அமைச்சின் 3வது காலாண்டிற்கான இறுதி செய்யப்பட்ட புள்ளிவிவரங்களின்படி ஜூன் மாதத்தில் 81,200ஆக இருந்த வேலை வாய்ப்புகள் செப்டம்பரில் 63,400ஆக குறைந்தது.
இந்தச் சரிவு, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்சத்தில் இருந்த 124,400 வேலை வாய்ப்புகளிலிருந்து படிப்படியாக குறைந்துள்ளது.
இதற்கு, கட்டுமானம், போக்குவரத்து மற்றும் சேமிப்பு, உற்பத்தி ஆகிய துறைகளே முக்கியக் காரணம். இத்துறைகளில் திறன் குறைந்த வேலை வாய்ப்புகள் அதிக வொர்க் பர்மிட் ஊழியர்களால் நிரப்பப்பட்டன
ஒருபக்கம் வேலை குறைந்தாலும் வேலையில் இல்லாதோரைவிட வேலை வாய்ப்புகள் அதிகமாகவே இருந்ததை மனிதவள அமைச்சு சுட்டிக்காட்டியது.
அதாவது, செப்டம்பரில் வேலையில்லாத ஒருவருக்கு 1.39 வேலை வாய்ப்பு இருந்தது. இது, ஜூனில் சற்றுக் கூடுதலாக 1.67ஆக இருந்தது.
இவ்வாண்டு இறுதியில் விழாக்கால நடவடிக்கைளால் வேலை வாய்ப்புகள் மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டது.
வேலை வாய்ப்பு குறைந்ததற்கான காரணங்களை மனிதவள அமைச்சு விளக்கியது.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 காலத்திற்குப் பின் முதலாளிகள் தங்களுக்குத் தேவையான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். ஊழியர்களும் தற்போதைய வேலையில் தொடர்ந்து நீடித்திருக்கின்றனர். ஊழியர்கள் வேலையிலிருந்து விலகும் விகிதமும் 2022ஆம் ஆண்டின் 1.7 விழுக்காட்டிலிருந்து 2024ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் 1.3 விழுக்காடாக குறைந்துள்ளது.
“வேலையின்மையுடன் ஊழியர் சந்தை இறுக்கமாக இருக்கும். ஆனால், அந்த இறுக்கம் அதிக காலியிடங்கள் நிரப்பப்படும்போது குறையும். வேலை வாய்ப்பு எண்ணிக்கையும் வேலை இல்லாதவர்களுடனான வேலை வாய்ப்பு விகிதமும் கொவிட்-19 பரவலுக்கு முந்திய நிலையை நோக்கிச் செல்கிறது,” என்று அமைச்சு கூறியது.
கடந்த காலாண்டில் தொடர்ந்து சிங்கப்பூரர்களையும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளையும் உள்ளடக்கிய வேலை வாய்ப்பு, உயர்திறன் கொண்ட அதிக ஊதியமுள்ள துறைகளில் வலுவாக வளர்ச்சியடைந்தது.
3ஆம் காலாண்டில் சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலை வாய்ப்பு 4,000ஆக அதிகரித்தது.
தகவல், தொடர்பு, நிபுணத்துவ சேவை, நிதிச் சேவை உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்பு வலுவாக இருந்ததே அதற்குக் காரணம்.
இதற்கிடையே, சிங்கப்பூர்வாசிகள் அல்லாத ‘எஸ்-பாஸ்’, ‘எம்பிளாய்மண்ட் பாஸ்’ ஆகியோருக்கான வேலை வாய்ப்பு 18,200ஆக அதிகரித்தது. குறிப்பாக, கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறையில் வொர்க் பர்மிட் ஊழியர்கள் அதிகமானோர் வேலைக்கு அமர்த்தப்பட்டதால் இது அதிகரித்தது.
பொதுவாக, கட்டுமான ஊழியர்களை உள்ளடக்கிய துறைகளில் பணியாற்ற போதுமான உள்ளூர்வாசிகள் இல்லை என்று அமைச்சு கூறியது.
ஆனால், ஒட்டுமொத்த வேலை வாய்ப்பு 3ஆம் காலாண்டில் 22,300க்கு அதிகரித்து. இது, முந்திய காலாண்டுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகம்.