ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில்: மலேசியா முதற்கட்ட சோதனை

2 mins read
e1e46573-5db6-4db3-ac73-9ca354b795a2
ஜோகூர் பாருவின் வாடி ஹனா பணிமனையில் உள்ள தண்டவாளத்தில் ‘டிரெயின் செட் 02’ எனும் முதலாவது ஆர்டிஎஸ் ரயிலை வைக்கும் பணி சனிக்கிழமை (நவம்பர் 15) மேற்கொள்ளப்பட்டது. - படம்: பெர்னாமா
multi-img1 of 2

ஜோகூர்பாரு: ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் சேவைத் திட்டத்தின் (RTS) முதற்கட்ட ரயில்வண்டி சோதனை ஜோகூர் பாருவில் உள்ள வாடி ஹனா பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) தொடங்கியது.

‘டிரெயின் செட் 02’ (Train Set 02) என்று பெயரிடப்பட்டுள்ள முதல் ரயில்வண்டியில் பல நிலைகளுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

சோதனையின் அங்கமாக, ரயில் வண்டி புக்கிட் சாகார் நிலையத்திலிருந்து புறப்பட்டு, அனைத்துலக எல்லையைக் கடந்து சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் நிலையம் வரை சென்று மீண்டும் ஜோகூர் திரும்பும். இதனை விரைவு ரயில் சேவையின் (RTSO) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அகமது மார்சுக்கி அரிஃபின் தெரிவித்தார்.

நான்கு கிலோ மீட்டர் தூரம் கொண்ட ரயில் சேவையின் அனைத்து செயல்பாட்டு திறன்களும் சோதிக்கப்படும். அவற்றில் மின்னியல் இயந்திரங்களும் அடங்கும்.

ரயில் வண்டி பல்வேறு வேகத்தில் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்படும். முழு தண்டவாளப் பாதை உட்பட ரயில் நிறுத்தப்பட்ட நிலையிலும் பயணிக்கும் போதும் மூன்று மிகத் துல்லிய வகைகளில் சோதிக்கப்படும் எனவும் திரு அகமது குறிப்பிட்டார்.

அதன்வழி உண்மையான பயண அனுபவமும் சோதனைக்கு உட்படும். சமிக்ஞை முறை, தொடர்புக் கருவிகள், தண்டவாளத்தின் தன்மை ஆகியன குறிப்பாக சோதிக்கப்பட்டு, சரளமான, பாதுகாப்பானப் பயணத்தை உறுதிசெய்வதே இந்த நடவடிக்கைகளின் இலக்கு என்று அவர் விளக்கினார்.

விரைவு ரயில் திட்டத்தின்படி, எட்டு ரயில் வண்டிகள் சேவையில் இயங்கும். அவை ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படுவதால் சோதனைகள் முறையாக மேற்கோள்ளப்பட்டு, அந்த எட்டு வண்டிகளும் ஆறு முதல் எட்டு மாதங்களில் சேவையில் இணைக்கப்படும்.

“இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், ரயில் வண்டிகள் மின்னியல் சாதனங்கள், சமிக்ஞை போன்ற மற்ற செயல்பாட்டு அமைப்புகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்,” என்று திரு அகமது கூறினார்.

பயணிகளைக் கொண்டு நடத்தப்படும் சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு நடைபெறும்.

விரைவு ரயில் சேவைத் திட்டத்தின் தலைவர் திரு கைரில் அகமது, 65 விழுக்காடு நிறைவடைந்துள்ள திட்டம் எதிர்பாரா பருவநிலைகளையும் கருத்தில்கொண்டு சுமுகமாக நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார். நடப்பில் உள்ள தரநிலைகளுக்கு ஏற்ப செயல்பட்டு, குறித்த நேரத்தில் திட்டம் முடிக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை மணிக்கு 10,000 பயணிகள்வரை இரு நிலையங்களுக்கும் சென்றுவர வகைசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்