ஜோகூர் இளவரசர் இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் ஹாலந்து ரோட்டில் உள்ள தனது 16 ஹெக்டர் நிலத்தில் ஆடம்பரப் பங்களாக்களைக் கட்டத் திட்டமிட்டுள்ளார்.
ஹாலந்து ரோட்டில் உள்ள இடத்தில் இளவரசர் இஸ்மாயில் குடியிருப்புக் கட்டடம் கட்டுவது தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
இளவரசர் இஸ்மாயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்படும் ஆடம்பரப் பங்களாக்களில் எத்தனை மாடிகள் இருக்க வேண்டும், நில விதிமுறைகள் போன்றவை குறித்து ஆணையம் ஆராயத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பூமலையில் ஜோகூர் அரச குடும்பத்திற்குச் சொந்தமான 13 ஹெக்டர் நிலத்தைச் சிங்கப்பூர் அரசாங்கம் எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
அதற்கு ஈடாக மன்னருக்கு ஹாலந்து ரோட்டில் 8.5 ஹெக்டர் நிலத்தைச் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கியது. இதை நகர மறுசீரமைப்பு ஆணையமும் சிங்கப்பூர் நில ஆணையமும் உறுதி செய்தன. இரண்டு இடத்திற்கான விலையும் ஒன்று என்று இரு அமைப்புகளும் தெரிவித்தன.
8.5 ஹெக்டர் நிலத்தைப் பெறுவதற்கு முன்னர் அங்கு இளவரசர் இஸ்மாயிலுக்குக் கூடுதலான இடங்கள் இருந்தன.
தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரில் ரிட் அவுட் பார்க், எங் நியோ அவென்யூ உள்ளிட்ட 39 ஆடம்பரப் பங்களாக்கள் உள்ள வட்டாரங்கள் உள்ளன.
“சிங்கப்பூரில் ஆடம்பரப் பங்களாக்களை வாங்குவதற்குக் கடுமையான போட்டி இருக்கும். பெரும்பாலான நேரத்தில் அவை இரண்டு தரப்புக்கும் இடையே ரகசியமாக நடக்கும். இப்போது வெளிப்படையாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால் கூடுதல் போட்டி இருக்கும்,” என்று தெரிவித்தார் சிங்கப்பூர் ரியல்டார்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி மோகன் சந்திரசேகரன்.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 23 இடங்களிலேயே ஆடம்பரப் பங்களாக்கள் இருந்தன. 2025ஆம் ஆண்டு அது 30ஆக அதிகரித்தது என்று அவர் கூறினார்.

