சட்டவிரோத வாடகை கார் சேவைகளுக்கு எதிராக சிங்கப்பூர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மலேசிய ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி கூறியுள்ளார்.
இருதரப்பும் பலன் அடையும் வகையில் பரஸ்பர பலனளிப்பு ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தனியார் வாடகை கார் சேவையை ஒழுங்குபடுத்த இருநாடுகளின் அரசாங்கங்களும் பொதுவான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்றார் ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ சென் தெரிவித்தார்.
சட்டவிரோத தனியார் வாடகை கார் சேவைகளுக்கு எதிராக சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்திருப்பதாக ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று திரு சென் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
இதனால் அத்தகைய சேவை வழங்கும் மலேசிய ஓட்டுநர்கள் விரக்தி அடைந்திருப்பதாகவும் சிரமப்படுவதாகவும் அவர் கூறினார்.
போக்குவரத்து சீராக இருப்பதற்கும் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கும் சிங்கப்பூர் இந்த நடவடிக்கைகளை எடுப்பது தமக்குப் புரிகிறது என்றார் அவர். ஆனால் இத்தகைய சேவையை ஒட்டுமொத்தமாக தடை செய்துவிட்டால் அதையே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மலேசிய ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று திரு சென் தெரிவித்தார். அத்துடன், அந்த ஓட்டுநர்களின் குடும்பங்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகும் என்றார் அவர்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பரஸ்பர பலனளிப்பு அணுகுமுறை கையாளப்பட வேண்டும் என்ற பரிந்துரையைத் திரு சென் முன்வைத்தார்.
எல்லை கடந்த தனியார் வாடகை கார் சேவை வழங்குபவர்களுக்கு மலேசியப் பொதுச் சேவை வாகன உரிமம் அல்லது சிங்கப்பூர் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கான தொழில்சார்ந்த உரிமம் இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமானவர்கள் என்ற சான்றிதழைப் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, தனியார் வாடகை கார் சேவைக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட வாகனப் பரிசோதனை மையங்களில் பரிசோதிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
பயணிகளுக்கான விபத்துக் காப்புறுதித் திட்டங்களை சேவை வழங்குவோர் வாங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
சிங்கப்பூரிலும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலும் சட்டவிரோத தனியார் வாடகை கார் சேவை வழங்கிய 22 ஓட்டுநர்கள் சாங்கி விமான நிலையத்திலும் கரையோரப் பூந்தோட்டங்களிலும் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஜூலை 12ல் தெரிவித்திருந்தது.
2022ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தனியார் வாடகை கார் சேவை வழங்கியதற்காக 116 ஓட்டுநர்கள் பிடிபட்டதாக ஆணையம் கூறியது. பயன்படுத்தப்பட்ட கார்கள் அனைத்தும் வெளிநாட்டில் பதிவான கார்கள்.
அந்த வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளில் $2,600 அபராதமும் வாகனப் பறிமுதலும் அடங்கும்.
சட்டவிரோத தனியார் வாகன கார் சேவைகளைப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று ஆணையம் கூறியது. அத்தகைய சேவை வழங்குவோரிடம் முறையான காப்புறுதித் திட்டம் இல்லை என்றும் இதன் விளைவாக பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் அது தெரிவித்தது.
மேலும் இத்தகைய சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உரிமம் உள்ள ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் ஆணையம் கூறியது.