தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருடன் உறவுகளை வலுப்படுத்த ஜோகூர் தயார்

2 mins read
8793b529-1586-471f-b2a9-38e867cc185e
பொதுநலன் மீதான தாக்கத்தை கருத்தில்கொண்டு, முற்போக்கான கொள்கைகளை செயல்படுத்த ஜோகூர் தயாராக உள்ளதை திரு ஒன் ஹஃபிஸ் காஸி வலியுறுத்தினார். - படம்: பெரித்தா ஹரியான்

ஜோகூர்பாரு: ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி, சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் இடையிலான உயர்மட்ட சந்திப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூருடன் தனது பொருளியல், உத்திபூர்வ உறவுகளை வலுப்படுத்த ஜோகூர் தயாராக உள்ளது.

வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் உடனான சந்திப்பு, ‘லீ குவான் யூ எக்ஸ்சேஞ்ச் ஃபெலோஷிப்’ திட்டத்தின் 82வது நபராக திரு ஒன் ஹஃபிஸ் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்தின் முதல் நாளில் நடைபெற்றது.

“இது ஓர் அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான ஈடுபாடாகும். வர்த்தகம், முதலீடு, வட்டாரப் பொருளியல் உருமாற்றத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இது வழிவகுக்கிறது. குறிப்பாக, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தின் செயலாக்கத்தின் மூலம் இது சாத்தியமாகும்.

“சிங்கப்பூர், சீனா, ஜெர்மனி, பிரிட்டன், ஹாலந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 70 நிறுவனங்கள் ஜோகூரில் உள்ள இன்வெஸ்ட் மலேசியா ஒருங்கிணைப்பு மையம் மூலம் முதலீட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன,” என்று திரு ஒன் ஹஃபிஸ் புதன்கிழமை (ஜூலை 30) பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

ஆர்வத்தின் காரணமாக, ஐந்து சிங்கப்பூர் நிறுவனங்கள் ஏற்கெனவே ஏறக்குறைய 1.34 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள முதலீடுகளை உறுதியளித்துள்ளதாக திரு ஒன் ஹஃபிஸ் தெரிவித்தார். ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் 78 மில்லியன் ரிங்கிட் கூடுதல் முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மலேசிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்களின் உதவியுடன் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டார பெருந்திட்டம் குறித்த அண்மையத் தகவல்களையும் சந்திப்பின்போது தாம் பகிர்ந்துகொண்டதாக திரு ஒன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

“ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தினுள் ஒரு தடையற்ற வர்த்தக வட்டாரத்தை நிறுவுதல், பொருள்கள், திறனாளர்களின் எல்லைத் தாண்டிய வசதி, ஜோகூரின் மேற்குப் பகுதியில் இரண்டாவது விரைவுப் போக்குவரத்து முறை இணைப்புக்கான முன்மொழிவு ஆகியவை சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட உத்திபூர்வத் திட்டங்களில் அடங்கும்.

“பொருளியல் உருமாற்றத்திற்கு அப்பாற்பட்டு வாழ்க்கைச் செலவினம், அடிப்படை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் தேவை, மிகுந்த ஆற்றலுடைய, அனைவரையும் உள்ளடக்கிய பொதுப் போக்குவரத்து முறையை மேம்படுத்துதல் போன்ற மக்களுக்கு மிகவும் முக்கியமான விவகாரங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்,” என்று திரு ஒன் ஹஃபிஸ் மேலும் கூறினார்.

பொதுநலன் மீதான தாக்கத்தை கருத்தில்கொண்டு, முற்போக்கான கொள்கைகளை செயல்படுத்த ஜோகூர் தயாராக உள்ளதை திரு ஒன் ஹஃபிஸ் வலியுறுத்தினார்.

“அனைவரையும் உள்ளடக்கிய, சமமான, நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய ஜோகூர், மலேசியா, சிங்கப்பூர் இடையேயான உத்திபூர்வ ஒத்துழைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்