ஜோகூர் ஆர்டிஎஸ் ரயில் இணைப்பு இங்கு சில்லறை விற்பனையை பாதிக்காது: ஓசிபிசி

ஜோகூர் ஆர்டிஎஸ் ரயில் இணைப்பு இங்கு சில்லறை விற்பனையை பாதிக்காது: ஓசிபிசி

2 mins read
இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில் பதிவான வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையில், 76 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் ஜோகூர் சென்றுள்ளனர்
79555358-8a92-49f4-ad24-5bf46e0cafc6
ஆர்டிஎஸ் ரயில் இணைப்புத் திட்டத்தை மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாரிகளுடன் பார்வையிட்டார். - படம்: ஃபோட்டோ பெர்னாமா

ஜோகூர் மாநிலத்துடன் மேற்கொள்ளப்படும் ஆர்டிஎஸ் (RTS) ரயில் இணைப்புத் திட்டம் சிங்கப்பூரின் உள்ளூர்ச் சில்லறை வர்த்தகத்தைப் பாதிக்காது என்று ஓசிபிசி குழுமத்தின் ஆய்வு அறிக்கை வியாழக்கிழமை (ஏப்ரல் 9) தெரிவித்துள்ளது.

அதிகமான சுற்றுப்பயணிகளின் வருகையும் இரு நகரங்களிலும் நிலவும் விலைவாசியின் குறைந்த இடைவெளியும் சிங்கப்பூரின் சில்லறை வர்த்தகம் தொடர்ந்து செயல்படுவதற்கு முக்கியக் காரணங்கள் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

ஆர்டிஎஸ் ரயில் இணைப்பு திட்டம் அடுத்த 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, சில்லறை விற்பனைத் துறையில் இவ்வாண்டு இறுதிக்குள் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

“ஜோகூரில் சிங்கப்பூரர்கள் அதிகம் செலவு செய்தாலும் அது உள்ளூர் சில்லறை விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சத் தேவையிருக்காது,” என்று ஆய்வை ஏற்று நடத்திய ஒசிபிசி குழுமத்தின் பொருளியல் வல்லுநர் செலினா லிங் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போது மத்திய கிழக்கில் நடக்கும் பதற்றம், சிங்கப்பூர் சில்லறை விற்பனையில் குறுகியக் காலப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.

ஜோகூரில் சிங்கப்பூரர்கள் ஓசிபிசி கட்டண அட்டைகளை அதிகமாகப் பயன்படுத்துவதைக் கொண்டு, அங்கு வலுவான வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடப்பதை அறியமுடிகிறது. வெளிநாடுகளில் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் ஐந்தில் ஒன்று ஜோகூர் பாருவில் செய்யப்படுகிறது என்று ஓசிபிசி குழுமத்தின் தரவுகள் காட்டுகின்றன.

இவ்வாண்டு தொடக்கத்தின் இரண்டு மாதங்களில் மட்டும் மூன்று மில்லியன் மக்கள் சிங்கப்பூரில் இருந்து ஜோகூருக்குச் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு, அதே காலகட்டத்தைக் காட்டிலும் அது 1.3 விழுக்காடு அதிகம்.

இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில் பதிவான வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையில், 76 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் ஜோகூர் சென்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்