ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உருவெடுத்து வரும் தரவு மையச் சந்தையில் சிங்கப்பூரும் ஜோகூரும் முன்னணி வகிக்க உள்ளன.
உலக மின்னிலக்கக் கட்டமைப்பு மறுவடிவம் பெற்றுவரும் நிலையில் ஆசிய, பசிபிக் வட்டாரம் அதிக முதலீடுகளை ஈர்த்து வருவதாக, உலக சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனமான ‘நைட் ஃபிராங்’ தெரிவித்து உள்ளது.
2024ஆம் ஆண்டு தரவு மையங்களுக்காக அந்த வட்டாரத்தில் மட்டும் US$15.5 பில்லியன் வெளிநாட்டு முதலீடுகள் செய்யப்பட்டன.
உலகின் வேறு எந்த வட்டாரத்திலும் இதுவரை இந்த அளவுக்கு அதிகமான முதலீடுகள் மின்னிலக்கக் கட்டமைப்புகளில் செய்யப்படவில்லை என்று அந்த நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
உலகத் தரவு மையச் சந்தை கடந்த ஆண்டு மறுஎழுச்சி பெற்றது. அதன் பரிவர்த்தனைகள் 118 விழுக்காடு ஏற்றம் கண்டு US$31.8 பில்லியனைத் தொட்டது. மறுமேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் மேம்பாட்டு நிலப் பகுதிகளின் விற்பனை போன்றவற்றால் அந்த எழுச்சி பதிவானது.
மேலும், ஆண்டுக்கு 18 விழுக்காடு என்னும் விகிதத்தில், 2030ஆம் ஆண்டுக்குள் US$4 டிரில்லியன் அளவுக்குத் தரவு மையச் சந்தை வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை சுட்டியது.
அதில் சிங்கப்பூரும் ஜோகூரும் அதிவேகமான வளர்ச்சி காணும். ஜோகூர் மட்டும், திட்டமிடப்பட்ட US$4.7 பில்லியன் முதலீடுகள் மூலம் தனது தரவு மைய ஆற்றலை 85 விழுக்காட்டுக்கு உயர்த்தக்கூடும்.
அதேநேரம், அதிக லாபம் ஈட்டக்கூடிய நகரங்களில் சிங்கப்பூர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூரில் உருவெடுத்திருக்கும் புதிய தரவு மையச் சந்தை, மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆற்றல் மிகுந்த நிறுவனங்களோடு பைட்டான்ஸ் (ByteDance), அலிபாபா, சீ குரூப் (Sea Group) போன்றவையும் கணிசமான அளவில் நிபுணர்களை ஈர்க்கக்கூடும்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் இதற்கு முன்னர் தனது எல்லைகளை விரிவுபடுத்தாத இது போன்ற நிறுவனங்கள் தற்போது அங்கு பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்து வருகின்றன.

