உலகப் பொருளியல் சூழலில் நிலவும் நிலையற்ற தன்மை, ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் அடிப்படை முன்மொழிவை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.
இது சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து உலக முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்க வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர், மலேசியாவின் பிரிட்டிஷ் வர்த்தகச் சபைகள் மற்றும் கேபிஎம்ஜி (KPMG) நிறுவனம் இணைந்து வியாழக்கிழமை (செப்டம்பர் 18) சிங்கப்பூரில் நடத்திய நிகழ்ச்சியில் திரு டான் கலந்துகொண்டபோது இதைத் தெரிவித்தார்.
“அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த அடிப்படை வரியிலிருந்து தப்பிக்கச் சில உற்பத்தியாளர்கள் அவர்களது பொருள்களை வேகமாக ஏற்றுமதி செய்தனர், இதனால் வரும் மாதங்களில் புதிய கொள்முதல்களுக்கான வாய்ப்பு குறையும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சில நாள்களுக்கு முன் சிங்கப்பூரின் ஆகஸ்ட் மாத எண்ணெய் சார ஏற்றுமதியின் அறிக்கை வெளியானது. அதில் ஏற்றுமதி 11.3 விழுக்காடு சரிந்தது. இதை மேற்கோள்காட்டி திரு டான் பேசினார்.
ஏற்றுமதி சரிவுக்குக் காரணம் உற்பத்தியாளர்கள் அவர்களது பொருள்களை முன்கூட்டியே அனுப்பியதுதான் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
“நாம் தெளிவாகத் திட்டமிட வேண்டும். தற்போது பொருளியல் நிலவரம் சீராக இல்லை, மோசமான நிலைமைக்கு நாம் செல்ல நேரிடலாம்,” என்று திரு டான் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“நாடு சார்ந்த வரியால் மட்டும் பாதிப்பு இருக்கும் என்று எண்ணிவிடக்கூடாது, துறை சார்ந்த வரிகளாலும் பாதிப்பு இருப்பதைக் கவனிக்க வேண்டும்,” என்று துணை அமைச்சர் சுட்டினார்.
“ இதுபோன்ற காரணங்களால் நாடுகள் இணைந்து வர்த்தகங்களில் ஈடுபட வேண்டும், இது இரு தரப்புக்கும் நன்மை தரும். அதுதான் ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் அடிப்படை சாராம்சம்,” என்று திரு டான் கூறினார்.
“எளிதாகச் சொல்லப்போனால் சிங்கப்பூரின் பலத்தை ஜோகூர் பயன்படுத்தும் அதேபோல் ஜோகூரின் பலத்தைச் சிங்கப்பூர் பயன்படுத்தும்,” என்று துணை அமைச்சர் டான் விளக்கினார்.
சிங்கப்பூரின் பலம் அதன் அரசியல் நிலைத்தன்மை, சட்ட ஒழுங்கு, நிதித் துறை வளர்ச்சி அதேபோல் ஜோகூருக்கு இயற்கை வளம், நிலம் பலமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தால் பல நிறுவனங்கள் பயன்பெறத் தொடங்கியுள்ளதாகவும் திரு டான் கூறினார்.