ஜோகூர் பாரு: மளிகைப் பொருள்கள் வாங்க சிங்கப்பூரர்கள் ஜோகூருக்குச் செல்வது வழக்கம். தற்போது தங்களது வாகனத்தில் பெட்ரோல் நிரப்பவும் அவர்கள் ஜோகூருக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிகிறது.
மத்திய கிழக்கில் எழுந்துள்ள போர்ப்பதற்றம் உலக எரிபொருள் விலையில் எதிரொலித்தது. அதன் காரணமாக சிங்கப்பூரிலும் எண்ணெய் விலைகள் உயர்ந்தன.
இங்கு ஒரு லிட்டர் RON95 ரக பெட்ரோலின் விலை $3.41 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மலேசியாவைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.
சிங்கப்பூர் வாகனங்கள், மலேசியாவில் மானியம் இல்லாத RON97 எரிபொருளை மட்டுமே நிரப்ப அனுமதிக்கப்படுகின்றன. அந்த பெட்ரோல் ஒரு லிட்டர் RM5.15 (S$1.64) என்ற விலையில் விற்கப்படுகிறது.
ஜோகூர் சென்று எரிபொருள் நிரப்புவோரில் ஒருவரான டேரில் என தமது பெயரைக் குறிப்பிட்ட சிங்கப்பூரர், தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
பிப்ரவரி மாதம் முதல் தாம் ஜோகூர் சென்று வருவதாகவும் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி இருப்பு வைப்பதற்காக அங்கு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், RON97 எரிபொருளுக்காகவும் வாரந்தோறும் ஜோகூர் பாருவுக்குச் செல்வதாகக் கூறிய அவர், அதேநேரம் சட்டத்தை மீறிவிடக்கூடாது என எச்சரிக்கையையும் விடுத்தார்.
சிங்கப்பூர் சட்டத்தின்படி, வெளியேறும் அனைத்து வாகனங்களின் எரிபொருள் தொட்டிகளும் குறைந்தபட்சம் முக்கால் பங்கு நிரம்பியிருக்க வேண்டும் என்பதை அவர் நினவூட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, தற்போதைய சூழலில் அதிகமான சிங்கப்பூரர்கள் எரிபொருள் நிரப்பவும் பொருள்களை வாங்கவும் ஜோகூர் வருவார்கள் என்று ஜோகூர் இந்திய சில்லறை வர்த்தகம் மற்றும் சிறிய வர்த்தகச் சங்கத்தின் தலைவர் டி ரவீந்திரன் கூறினார்.

