கேலாங்கில் கூட்டு அமலாக்க நடவடிக்கை, 41 பேரிடம் விசாரணை

கேலாங்கில் கூட்டு அமலாக்க நடவடிக்கை, 41 பேரிடம் விசாரணை

படம்: சிங்கப்பூர் காவல்துறை

30 Sep 2024 - 4:01 pm

2 mins read

கேலாங் வட்டாரத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கும் செப்டம்பர் 1ஆம் தேதிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளை அடுத்து மொத்தம் 41 பேரிடம் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் காவல்துறை, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் உணவு அமைப்பு, சிங்கப்பூர் சுங்கத் துறை ஆகியவை இணைந்து அந்த அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன.

கேலாங் வட்டாரத்தில் சட்டவிரோதமான சூதாட்டம், உடல்நலப் பொருள்கள் விற்பனை, போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள், சட்டவிரோதமாக வீடு வீடாகச் சென்று பொருள்களை விற்பது போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பது நோக்கம் என்று காவல்துறை செப்டம்பர் 30ஆம் தேதி தெரிவித்தது.

விசாரிக்கப்படுவோரில் 22 பேர் ஆண்கள் என்றும் 19 பேர் பெண்கள் என்றும் கூறப்பட்டது. அவர்கள் 20 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

மேலும், 13 ஆண்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

பிடோக் காவல்துறைப் பிரிவின் குற்றவியல் விசாரணைத் துறை அதிகாரிகளும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் பொதுக் கேளிக்கை விடுதிகள், உடற்பிடிப்புக் கூடங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

அதில் கேலாங் ரோட்டிலும் அல்ஜுனிட் ரோட்டிலும் ஐந்து கேளிக்கை விடுதிகள் உரிம நிபந்தனைகளை மீறியது ஆகஸ்ட் 23ஆம் தேதி தெரியவந்தது. அவற்றில் நான்குக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மற்றொரு விடுதி தொடர்பில் விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

கேலாங் ரோட்டிலும் அல்ஜுனிட் ரோட்டிலும் அமைந்துள்ள ஐந்து கேளிக்கைக் கூடங்கள் உரிம நிபந்தனைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.
கேலாங் ரோட்டிலும் அல்ஜுனிட் ரோட்டிலும் அமைந்துள்ள ஐந்து கேளிக்கைக் கூடங்கள் உரிம நிபந்தனைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

ஆகஸ்ட் 26ஆம் தேதி, கேலாங் ரோட்டில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட இரண்டு உடற்பிடிப்புக் கூடங்கள் பிடிபட்டன. இதன் தொடர்பில் 45 வயதும் 57 வயதுமுடைய ஆடவர்கள் இருவரிடம் விசாரணை தொடர்கிறது.

இந்நடவடிக்கையின்போது 20 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்ட 15 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இரு ஆடவர்களும் பிடிபட்டதாகக் கூறப்பட்டது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி, கேலாங் ரோட்டில் இரண்டு உடற்பிடிப்புக் கூடங்கள் சட்டவிரோதமாகச் செயல்பட்டது தெரியவந்தது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி, கேலாங் ரோட்டில் இரண்டு உடற்பிடிப்புக் கூடங்கள் சட்டவிரோதமாகச் செயல்பட்டது தெரியவந்தது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

உபி அவென்யூ 3லும் உபி ரோடு 2லும் ஆகஸ்ட் 25ஆம் தேதி சட்டவிரோதமாகச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆண்கள் ஐவரும் பெண்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஏழு பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கும் 29க்கும் இடையே, சட்டவிரோதமாக இருமல் மருத்து உள்ளிட்ட உடல்நலப் பொருள்களை விற்பனை செய்வோரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஆடவர் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு $9,100.

ஆகஸ்ட் 29ஆம் தேதி, சுங்கத் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கள்ளச் சிகரெட்டுகளை வைத்திருந்த பத்துப் பேர் பிடிபட்டனர்.

அதே நாளில் நிலப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களையும் மின்சைக்கிள்களையும் சட்டவிரோதமாக மாற்றியமைத்ததன் தொடர்பில் ஆடவர்கள் இருவர் பிடிபட்டனர்.

கேலாங்கில் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு தொடர்ந்து கூட்டாகச் செயல்படவிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
சோதனைசட்டவிரோதம்நடவடிக்கைவிசாரணைகேலாங்