1,300க்கும் மேற்பட்ட சோதனைகள்: 1,700க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

1,300க்கும் மேற்பட்ட சோதனைகள்: 1,700க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

2 mins read
16f8df87-56e9-44bc-bfad-94147a756b81
சட்டவிரோத சூதாட்டம், மின்சிகரெட் தொடர்பான குற்றங்கள், போக்குவரத்து விதிமீறல்கள், குடிநுழைவுக் குற்றங்கள், சட்டவிரோத வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு எதிராக 1,300க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன - படங்கள்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூரில் ஜூன் 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கூட்டு அமலாக்க நடவடிக்கைகளில், பல்வேறு குற்றங்களுக்காக 1,700க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரிக்கப்படுபவர்களில் 1,173 ஆண்களும் 603 பெண்களும் அடங்குவர் என்றும் அவர்கள் அனைவரும் 15 முதல் 85 வயதுக்குட்பட்டோர் என்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அவர்களில் 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

ஏழு காவல்துறை பிரிவுகள், குற்றப் புலனாய்வுத் துறை, போக்குவரத்துத் துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிமைத் தற்காப்புப் படை , நிலப் போக்குவரத்து ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவற்றின் 5,600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இணைந்து 1,300க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தினர்.

சட்டவிரோத சூதாட்டம், மின்சிகரெட் தொடர்பான குற்றங்கள், போக்குவரத்து விதிமீறல்கள், குடிநுழைவுக் குற்றங்கள், சட்டவிரோத வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

செம்பவாங் சாலை, ஈசூன் ஸ்திரீட் 61 ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 17 பேர் சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து $4,740க்கும் அதிக ரொக்கமும் சூதாட்டக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு சோதனையில், பதிவு செய்யப்படாத, விதிமுறைகளுக்குப் புறம்பான 15 உந்து நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 25 விதிமீறல்களையும் நிலப் போக்குவரத்து ஆணையம் கண்டறிந்தது.

மேலும், சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்த மூன்று பதின்ம வயதினரும் கைது செய்யப்பட்டனர். ஜாலான் மாஸ் புத்தே, பாலஸ்டியர் சாலை, கிளார்க் கீ உள்ளிட்ட பகுதிகளில் உரிமமின்றி இயங்கிய உடற்பிடிப்பு நிலையங்கள், விடுதிகள் ஆகியவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டு, பெண்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
குற்றம்அமலாக்கம்நடவடிக்கைபறிமுதல்கைது