காவல்துறையின் கூட்டு நடவடிக்கை: $9 மில்லியன் மின்னிலக்க நாணய மோசடிகள் முறியடிப்பு

காவல்துறையின் கூட்டு நடவடிக்கை: $9 மில்லியன் மின்னிலக்க நாணய மோசடிகள் முறியடிப்பு

1 mins read
5e81018c-31da-45e2-b4ba-777954b966e0
மின்னிலக்க நாணய மோசடிக்கு எதிரான நான்காவது கூட்டு நடவடிக்கை ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

சிங்கப்பூரில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 355க்கும் மேற்பட்டோர் மின்னிலக்க நாணய மோசடிகளில் $8.94 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பறிகொடுப்பதிலிருந்து தப்பியுள்ளனர்.

காவல்துறையும் மின்னிலக்கக் கட்டண வில்லைச் சேவை நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை அதனைச் சாத்தியமாக்கியது.

காவல்துறை வியாழக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்ட அறிக்கையில், மின்னிலக்க நாணய மோசடிக்கு எதிரான நான்காவது கூட்டு நடவடிக்கை ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெற்றதாகத் தெரிவித்தது.

சிங்கப்பூர் காவல்துறையின் இணையத் தளபத்தியப் பிரிவு, மின்னிலக்கக் கட்டண வில்லைச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டது.

காயின்பேஸ், காயின்ஹக்கோ, டிடிசிபே, ஜெமினி, இண்டிபெண்டென்ட் ரிசர்வ், ஓகேஎக்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ்எக்ஸ், அப்பிட் போன்றவை அந்த நிறுவனங்களில் அடங்கும்.

அரசாங்க அதிகாரிகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்தல், முதலீட்டு மோசடிகள், வேலை வாய்ப்பு மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மோசடிகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். அத்தகையோரை அடையாளங்காண, ‘சைனாலிசிஸ்’, ‘டிஆர்எம் லேப்ஸ்’ ஆகிய முன்னணி நிறுவனங்களின் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி அதிகாரிகள் மேம்பட்ட பகுப்பாய்வுகளை மேற்கொண்டதாகக் காவல்துறை கூறியது.

இதில் பங்கேற்ற மின்னிலக்கக் கட்டண வில்லைச் சேவை நிறுவனங்கள், பாதிக்கப்பட்டோரை அடையாளங்காணத் துணைபுரியும் தகவல்களை வழங்கி உதவின. இதன் மூலம் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் தலையிட்டு, பல மில்லியன் வெள்ளி இழப்புகளைத் தடுத்து நிறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்
இணையம்மோசடிஇணையப் பாதுகாப்புகாவல்துறைமின்னிலக்க நாணயம்