ஊழியர்களுக்கு மத்திய சேமநிதி (மசேநிதி) பங்களிப்புகளைச் செலுத்தத் தவறியதற்காக, ஜாலிபீன் ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 24) $68,000 அபராதம் விதித்தது.
மசேநிதி மொத்த நிலுவைத் தொகை $212,295 என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜாலிபீன் நிறுவனத்தின் சார்பாக அதன் பிரதிநிதி ஷஹ்ருல் நஸ்ரின், மசேநிதி சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
2024 பிற்பகுதிக்கும் 2025 முற்பகுதிக்கும் இடையில் குறைந்தது 16 ஊழியர்களுக்கு மசேநிதி பங்களிப்புகளைச் செலுத்த அந்த நிறுவனம் தவறியது.
அபராதத்துடன் கூடுதலாகச் செலுத்த வேண்டிய S$212,295 நிலுவைத் தொகைக்கான பொறுப்புச் சான்றிதழையும் நீதிபதி வழங்கினார்.
தண்டனையைக் குறைக்குமாறு வாதிட்ட திரு ஷஹ்ருல், ஜாலிபீன் நிதி நெருக்கடியில் இருப்பதால் நீதிமன்றம் கருணை காட்டும்படி வேண்டுகோள் விடுத்தார்.
“முன்னாள் ஊழியர்களுக்கு மசேநிதி பங்களிப்பையும் சம்பளப் பாக்கியையும் செலுத்துவதே எங்கள் தலையாய முன்னுரிமை,” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், புதன்கிழமை பணத்தைச் செலுத்த இயலாது என்றும் ஒரு மாதகால அவகாசம் தேவை என்றும் திரு ஷஹ்ருல் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
$68,000 முழுத் தொகையையும் அக்டோபர் 22ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.