சிங்கப்பூரின் ஜூ கூன் வட்டாரத்தில் மிதிவண்டி பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இரைச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இரைச்சல் எழுப்பக்கூடிய இயந்திரங்கள் பலவற்றில் இரைச்சல் தடுப்புத் தகடுகளையும் நுரைப் பலகைகளையும் ‘நாக்கானோ மெட்டல் பிரஸ்’ என்னும் அந்த நிறுவனம் அமைத்து உள்ளது.
தொழிற்சாலையில் இரைச்சலைத் தடுக்கும் முயற்சியாகவும் இயந்திரங்களை இயக்கும் ஊழியர்களின் செவித்திறனைப் பாதுகாக்கவும் அந்த நடவடிக்கைகளை அது மேற்கொண்டு உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தனது 21 இயந்திரங்களில் 17ல் அதுபோன்ற இரைச்சல் தடுப்புக் கருவிகளை அது நிறுவி உள்ளது. எஞ்சிய இயந்திரங்களிலும் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் அக்கருவிகளை அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
வேலையிடத்தில் இரைச்சல் காரணமாக காதுகேளாமை ஏற்படும் பிரச்சினை மீது கவனம் செலுத்தும் மனிதவள அமைச்சின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்நிறுவனம் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது.
இரைச்சல் தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்ட பின்னர் இயந்திரங்களை இயக்குவது தற்போது எளிதாக உள்ளது என்று நாக்கானோ நிறுவனத்தின் பொறியாளர்களில் ஒருவரான சின் ஹுவே லீ என்பவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

