டிபிஎஸ் வங்கியின் தலைமை நிர்வாகி அதிகாரி டான் சூ ஷான், இவ்வாண்டுக்கான ஃபார்ச்சூன் இதழின் ஆற்றல்வாய்ந்த பெண்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவர் வங்கியின் தலைமை நிர்வாகியாக இந்த ஆண்டுதான் பதவியேற்றார்.
எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியோரை ஃபார்ச்சூன் இதழ் தேர்வுசெய்தது. வர்த்தகத்தின் முன்னேற்றத்திற்கு வட்டார அளவிலும் அனைத்துலக அளவிலும் வாய்ப்புகளை உருவாக்கும் பெண் தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்தனர்.
மறுபுறம் ஆக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பெண்களின் பட்டியலில் சிங்கப்பூரின் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ இடம்பிடித்தார்.
அவருடன் தோக்கியோ ஆளுநர் யுரிகோ கொய்கோ, பிளேக்பிங் என்ற கே-போப் பெண்கள் குழுவைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், நடிகைகள் மிஷெல் இயோ, சின் சிலெய், ஒலிம்பிக் சறுக்கு விளையாட்டாளர் இலீன் கூ, டென்னிஸ் வீராங்கனைகள் நவோமி ஓஸாகா, செங் சின்வென் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றனர்.
உலகின் முதல் தேசிய செயற்கை நுண்ணறிவு உத்திகளான சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு நிர்வாகக் கட்டமைப்பைத் திருமதி டியோ மேற்பார்வையிட்டவர் என்று சஞ்சிகை அவரைப் பற்றி குறிப்பிட்டது.
செயற்கை நுண்ணறிவைச் சார்ந்த ஊழியரணியை உருவாக்கவும் திருமதி டியோ முன்னுரிமை அளித்துள்ளார் என்ற சஞ்சிகை, துடிப்புமிக்க பயிற்சி பங்காளித்துவம் மூலம் செயற்கை நுண்ணறிவு, தகவல் பகுப்பாய்வு, இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் 2,600க்கும் அதிகமான நிபுணர்கள் பணியமர காரணமாக இருந்தார் என்றது.
மனிதவள அமைச்சராக இதற்குமுன் பொறுப்பு வகித்த திருமதி டியோ, பணியிலிருந்து ஓய்வுபெறும் வயதையும் வேலை மறுநியமன வயதையும் உயர்த்த பத்து ஆண்டுத் திட்டத்தை வகுத்தார் என்று ஃபோர்ச்சூன் சஞ்சிகை சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
அத்தியாவசிய ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வைப் பெற்றுத்தந்தது, சிங்கப்பூரின் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடிமக்களின் ஊதிய ஆதரவை விரிவுபடுத்தியது போன்ற பலவற்றிலும் திருமதி டியோ கவனம் செலுத்தியதை அது சுட்டிக்காட்டியுள்ளது.