தேசிய தின அணிவகுப்பு, நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க கடலோரப் பழங்குடியினரான ‘ஓராங் லாவுட்’ பாரம்பரியம் முதல் பிரபல நகைச்சுவைக் கதாபாத்திரமான ‘புவா சூ காங்’ வரையிலான கலாசாரப் பயணத்தை நினைவுகூர்ந்தது.
தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், ஆறு அத்தியாயங்களாகப் படைக்கப்பட்டன. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் பிணைத்துக் கொண்டாடும் வகையில் அவை அமைந்திருந்தன. எல்லைகளை விரிவுபடுத்தி, புதிய உயரத்தை ஒன்றிணைந்து எட்டுவதைப் படைப்புகள் இலக்காகக் கொண்டிருந்தன.
பாடகி அஸ்னிதா தாவுத்
இரண்டாம் அத்தியாயத்தில் இடம்பெற்ற மக்களின் அணிவகுப்பு, அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களின் நலனுக்காகச் செயல்பட்டோரைக் கொண்டாடியது.
சிங்கப்பூரின் கடல்சார் பாரம்பரியத்திற்கும் பழங்குடிச் சமூகத்திற்கும் புகழாரம் சூட்டும் வகையில் கம்பீரமான படைப்பின் மூலம் மேடையை அலங்கரித்தார் ‘ஓராங் லாவுட்’ பாடகி அஸ்னிதா தாவுத்.
‘ஓராங் லாவுட்’ வட்டார வழக்கில் ‘ஆம், நிச்சயமாக’ என்று பொருள்படும் ‘ஆக் டிக்கோ’ என்பது பாடலின் தலைப்பு.
சிங்கப்பூரின் கடல்வழிப் பழங்குடிகளைக் கொண்டாடியதோடு கடலோர அடையாளத்தையும் சொந்தம் என்ற உணர்வையும் வெளிப்படுத்தி, நிலத்திலிருந்து கடலுக்கான நாட்டின் தொடர்பை அந்தப் பாடல் கண்டறிந்தது.
மலாய் மொழியில் ‘கடல் மக்கள்’ என்று பொருள்படும் ‘ஓராங் லாவுட்’, ஒரு காலத்தில் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள தென்தீவுகளிலும் கடலோரப் பகுதிகளிலும் வாழ்ந்தனர்.
அவர்களின் வாழ்வாதாரம் நிலத்தோடும் கடலோடும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது; அவர்கள் மீனவர்களாகவும் கிராமவாசிகளாகவும் வியாபாரிகளாகவும் வாழ்ந்துவந்தனர்.
சோகா காக்காய் சிங்கப்பூரைச் சேர்ந்த முரசு கொட்டுவோர், 700 கலைஞர்களுடன் இணைந்து தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியின் ‘நமது எல்லைகளுக்கு அப்பால்’ என்ற மூன்றாவது அத்தியாயத்தில் அஸ்னிதா பாடினார்.
இது நாட்டின் கடல்சார் வரலாற்றுக்கு மரியாதையைச் செலுத்தியதுடன், அதன் செல்வாக்கு எல்லைகளைத் தாண்டி எவ்வாறு பரவியது என்பதையும் சுட்டிக்காட்டியது.
சிங்கப்பூரின் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தப்பீர் எனும் தும்பிப்பன்றி, சருகுமான் போன்ற உள்ளூர் விலங்குகளின் பொம்மைகளைப் பிடித்திருந்த கலைஞர்களும் அவருடன் இணைந்தனர்.
பாடகி சுஷ்மா சோமா
சிங்கப்பூரைப் போற்றும் கர்நாடக இசைப் பாடலைப் பாடி ரசிகர்களை ஆனந்தத்தில் மூழ்கடித்தார், பாடகி சுஷ்மா சோமா.
‘சோலையும் மணமும் மணந்து சிங்கப்பூராய்ப் பிறந்தவளே’ எனும் அவரின் அழகிய வரிகளுடன் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது பாடல். அவருடன் உள்ளூர் நீர்நிலைகளில் காணப்படும் கடற்பசு, ஆமை போன்ற கடல்வாழ் உயிரினங்களின் பொம்மைகளுடன் கலைஞர்களும் சேர்ந்துகொண்டு நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர்.
தொலைக்காட்சியின் மைல்கற்கள்
நிகழ்ச்சி ‘காலத்திற்கு அப்பால்’ என்ற நான்காவது அத்தியாயத்திற்குச் சென்றபோது, பார்வையாளர்கள் சிங்கப்பூரில் முதன்முதலில் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்ட 1960களின் காலகட்டத்திற்குள் நுழைந்தனர்.
1965ல் சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டை வரையறுத்த ஒலிகள், நிகழ்ச்சிகள், இயக்கங்கள் வழியே ஒலிபரப்புத் துறையின் மைல்கற்களை இந்த அங்கம் வெளிப்படுத்தியது.
1970களின் காற்பந்துப் போட்டிகளின் காட்சிகள், 1980களின் புகழ்பெற்ற சீன நாடகமான ‘தி அவேக்கனிங்’, 1990களின் புகழ்பெற்ற நகைச்சுவை நாடகமான ‘புவா சூ காங் பிரைவேட் லிமிட்டெட்’, ‘சிங்கா த கைண்ட்னஸ் லயன்’, ‘டீமி தி புரோடக்டிவிட்டி பீ’ போன்ற சின்னங்களைக் கொண்ட கடந்தகால தேசிய இயக்கங்களின் காட்சிகள் பார்வையாளர்களுக்கு விருந்தளித்தன.
இந்த அங்கத்தில் பாடல்களின் நினைவலைகளைத் தூண்டும் இசைப் படைப்புகளும் இடம்பெற்றன.
ஸிஸி லிம், நஜீப் அலி, உதய சௌந்தரி உள்ளிட்ட கலைஞர்கள், ‘சின்யாவோ’ செவ்வியல் பாடலான ‘மூன்லைட் இன் த சிட்டி’, வசந்தம் தொலைக்காட்சியின் ‘வேட்டை’ நாடகத்தின் கருப்பொருள் பாடல் போன்ற பிரபலமான பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
சிறுவர்களுக்கான தகவல்-கல்வித் திட்டமான ‘மாட் யோயோ’வின் கதாபாத்திரங்கள், தேசிய இயக்கங்கள் சிலவற்றின் சின்னங்கள், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், மக்கள் கழகத்தின் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேடையில் அவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிக்கு அழகு சேர்த்தனர்.


