‘சிறை’ - குற்றவாளிகளைப் பொறுத்தமட்டில் இது வெறும் கட்டடமல்ல. தீர்ப்புக்குப் பிறகு தொடங்கும் மற்றொரு வாழ்க்கை. இதன் முதல் அத்தியாயம் எப்படி இருக்கிறது?
குற்றவாளிக்குத் தண்டனை விதிக்கும் நீதிமன்றம், அவரை மற்றோர் அமைப்பிடம் ஒப்படைக்கிறது. ஒழுங்கும் கட்டுப்பாடும் ஆட்சி செய்யும் அந்த அமைப்பு குற்றவாளிகளைத் தன்னுள் எப்படிச் சேர்த்துக்கொள்கிறது?
வெளியில் சுதந்திரமாக இருந்த ஒருவர், சிறைச்சாலைக்குள் நுழைந்தவுடன் சிறைக்கைதியாக மாறும் அந்தத் தருணத்தின் கணம் என்ன?
இவை எல்லாம் எனக்குள் நீண்ட நாள்களாக இருந்த கேள்விகள்.
அனுமானங்களுக்கும் கற்பனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அந்தக் கேள்விகளுக்குள் நானே நேரடியாக நடந்துசென்று விடைதேடும் வாய்ப்பாக, சிறைச் சேர்க்கை நடைமுறைகளை ஊடகங்களின் பார்வைக்கு வைத்தது சிங்கப்பூர்ச் சிறைச்சேவைத் துறை.
அரசு நீதிமன்றத்தில் எங்கள் பயணம் தொடங்கியது. தீர்ப்பு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள அரசு நீதிமன்ற தடுப்புச் சிறை வளாகத்திடம் குற்றவாளி ஒப்படைக்கப்படுகிறார்.
உள்ளே நுழைந்தவுடன், அவரது பெயர், அடையாள அட்டை எண் விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. சரியான நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளதை இது உறுதிப்படுத்துகிறது.
நீதிமன்றத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, அபராதத்தின் விவரங்களை அதிகாரியொருவர் வாசிக்க, அதனைக் குற்றவாளி ஏற்கிறார். இது, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து அவர் அறிந்திருப்பதை உறுதிசெய்கிறது.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து, அவருக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் இருக்கின்றனவா, நீண்டகால மருந்துகள் எடுக்க வேண்டியுள்ளதா என்பதை அதிகாரி கேட்டறிகிறார்.
இதற்கு அடுத்தபடியாகக் கை, கால்களில் விலங்கு பூட்டப்படுகிறது.
ஆஸ்துமா உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் இருந்தால் கைகளை முன்னால் வைத்து விலங்கு மாட்டப்படும்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் கைதிகளின் சேர்க்கை முறை நடைபெறுவதாகக் கூறிய சிறைச்சாலை உதவிக் கண்காணிப்பாளர் முகம்மது ஆஸ்ஃபாட்லே அஸ்பர், அடுத்தடுத்த நடைமுறைகளை விளக்கினார்.
குற்றவாளியின் பெயர், கைரேகை, புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, அவருக்கான பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சாங்கிச் சிறையிலும் இது பதிவுசெய்யப்படும் என்றாலும், இங்குள்ள கட்டமைப்பிலும் இப்பதிவுகள் செய்யப்படுகின்றன.
முழுவதுமாகக் கண்காணிப்புக் கருவிகளுடன், வெளிநபர்கள் நுழைய முடியாத இப்பகுதியில், குற்றவாளியின் திறன்பேசி, பணப்பை உள்ளிட்ட சொந்தப் பொருள்கள், எளிதில் சேதமுறாத நெகிழிப் பைகளுக்குள் அடைக்கப்பட்டு, அவரது விரல்ரேகையால் மட்டுமே திறக்கப்படகூடிய பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படுகின்றன.
குற்றவாளிகள் பிணை, அல்லது அபராதம் குறித்துத் தெரிவிக்க ஏதுவாக ஒன்று, அல்லது இரண்டு நபர்களைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியும். இதற்காக, அந்தத் தொலைபேசி எண்களும் பதிவுசெய்யப்படுகின்றன.
பதிவைத் தொடர்ந்து அவருக்கு, ‘கியூஆர்’ குறியீட்டுடன் கூடிய கைப்பட்டி ஒட்டப்படுகிறது.
பின்னர் கைதியின் உடல் பரிசோதனை நடைபெற்று அவரது உடைகள் சிறைச் சீருடைகளுக்கு மாற்றப்படுகின்றன.
குற்றவாளி, தமது கைப்பட்டியில் இருக்கும் குறியீட்டை வருடுவதன் மூலம் பதிவுசெய்த எண்களைத் தொலைபேசியில் அழைக்க முடியும்.
மூன்று நிமிடங்கள் மட்டுமே நீளும் அந்த அழைப்பில் குற்றவாளி, தமது கடப்பிதழ் இருக்கும் இடத்தையும் பிணை அல்லது அபராதத் தொகையையும் குறிப்பிட்டு எடுத்துவரச் சொல்லலாம். அழைப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து, அவர் சாங்கி சிறைச்சாலைக்கு மாற்றப்படும் வரை காத்திருப்புச் சிறையில் (Holding Cell) வைக்கப்படுகிறார். அது, கை கழுவும் தொட்டி, கழிப்பிடம் ஆகியவற்றுடன் கூடிய அறை. வெளியுலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்வில் நுழைவதற்கான ஒத்திகைபோலத் திகழும் ஒன்று.
தமது இதயத்துடிப்பு மட்டுமே கேட்கும் பேரமைதிக்கு மத்தியில், வாழ்வில் நடந்தவற்றையும், அடுத்து நடக்கப்போவது குறித்தும் ஆழ்ந்து சிந்திப்பதைத் தவிர வேறேதும் செய்ய இயலாத சில மணி நேரம்.
கடந்த 2023-24ஆம் ஆண்டுகளில் ஏறத்தாழ 4,500 பேர் தண்டனை பெற்றுள்ளதாக ஆய்வு குறிப்பிடுகிறது. அவர்களில் எட்டு விழுக்காட்டினர் பெண்கள்.
முதன்முதலாகச் சிறைக்குச் செல்லும் சிலர் மன அழுத்தத்துக்கு ஆளாவதைக் காணலாம் என்று கூறிய சிறைச்சாலை உதவிக் கண்காணிப்பாளர் ஆஸ்ஃபாட்லே, குற்றவாளியான ஒரு பெண், தமது குழந்தைகளைத் தவிக்கவிட்டுச் சிறைக்கு வந்ததைக் கூறி அழுததை நினைவுகூர்ந்தார்.
அவர்களுக்கு இயன்றவரை ஆறுதல் கூறப்படுவதுடன், அவர்களது உற்றார் உறவினர்க்கு அழைத்து அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவிகள் வழங்கப்படும் என்றார்.
சாங்கி சிறை
காத்திருப்பின் இறுதியில் ‘கருப்பு மரியா’ எனும் 16 இருக்கை கொண்ட சிறைப் பேருந்தில் (Black Maria - Prison bus) குற்றவாளி ஏற்றப்பட்டு சாங்கி சிறைச்சாலை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பெருங்கதவுகள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ள வளாகம் அது.
அங்கு மீண்டு அவரது விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, ஏதேனும் பொருள்கள் கொணர்ந்துள்ளாரா எனச் சரிபார்க்கப்படுகிறது.
தொடர்ந்து முழு உடற்சோதனை நடைபெறுகிறது. உடல் பாகங்களில் ஏதேனும் பொருளை எடுத்து வருவதைத் தவிர்ப்பதற்காக முழு உடலை ‘ஸ்கேன்’ செய்யும் கருவியில் வைத்து சோதனை நடத்தப்படுகிறது.
தொடர்ந்து, சிறைச்சாலை மருத்துவ அதிகாரி, தேசிய சுகாதார மின்பதிவுகளின் உதவியுடன் அவரது உடல்நிலை குறித்த தகவல்களைப் பெறுவார். பின் தேவையான சோதனைகளை நடத்தி, உரிய நடைமுறைகளை அவர் மேற்கொள்வார்.
அனைத்துச் சோதனைகளையும் கடந்த பின், குற்றவாளி, அவருக்காக ஒதுக்கப்பட்ட சிறையில் அடைக்கப்படுகிறார்.
ஒரு கைதி, நான்கு முதல் எட்டுக் கைதிகள் வரை தங்கக்கூடிய அறையில் வைக்கப்படுவார். அனைத்துச் சிறைகளிலும் கழிப்பறை வசதிகள் இருக்கும்.
ஒவ்வொரு கைதிக்கும் ஒரு பாய், இரு போர்வைகள் வழங்கப்படுகின்றன. அங்கு உணர்ச்சிக்கு இடமில்லை. ஒழுக்கத்திற்கே முதன்மை. சிறைத்துறை, குற்றவாளியைச் சரிப்படுத்தி வாழ்வில் இணையவைக்கத் தனது வேலைப்பாட்டைத் தொடர்கிறது.
சிறைச்சாலை ஆட்பேர் கண்காணிப்பாளர் தியோ செங் பூன், “சிறைவாழ்க்கை அமைதியாகக் கழிய வேண்டும் என நினைக்கிறோம். ஆனாலும், சில நேரங்களில் கைதிகளுக்கிடயே கைகலப்புகள் நிகழ்வதுண்டு. நியாயமற்ற முறையில் நடந்துகொள்ளும் கைதிகளைச் சமாளிப்பதும், வன்முறையில் ஈடுபட்டு தங்களுக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடும் கைதிகளையும் கட்டுப்படுத்துவது இப்பணியின் சிரமான பகுதியாகும்,” என்றார்.
இந்தப் பணி பழகிவிட்டதாகச் சொன்ன அவர், ஒரு நாள் வெளியில் தமது குடும்பத்தினருடன் உணவுண்டு கொண்டிருந்த முன்னாள் கைதி தம்மை கவனித்து வந்து பேசி நன்றி கூறியதை நினைவுகூர்ந்தார்.
இயல்பு வாழ்வுக்கு அவர் திரும்ப சிறு வகையில் உதவியாக அமைந்துள்ளதை நினைத்து நெகிழ்ந்ததையும் திரு டியோ குறிப்பிட்டார்.
எப்போதும் கைதிகளின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள காரணத்தைப் புரிந்துகொண்டு, அவர்களிடம் உள்ள நல்ல பக்கதைப் பார்ப்பது வழக்கம் என்ற அவர், “சமூகமும் அவர்களை இதே கண்ணோட்டத்தில் பார்த்து, அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

